அசோக பீரிஸின் தலைமையிலான எல்லை நிர்ணய முறைப்பாட்டு விசாரணைக்குழுவின் எல்லை நிர்ணய அறிக்கை சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
எல்லை நிர்ணய அறிக்கை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி வட்டார எல்லைகள் வகுப்பதிலும் மக்கள் தொகையைக் கணிப்பதிலும் பல தவறுகள் இடம்பெற்றுள்ளன.
சில பிரதேசங்களில் ஏற்கனவே அடர்த்தியாக இருந்த முஸ்லிம் மக்களின் சனத்தொகைப் பரம்பல் இல்லாமற் செய்யப்பட்டு சிதறடிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கு சவால்கள் ஏற்பட்டுள்ளன.
முன்பு 06 ஆயிரமாக இருந்த உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவம் தற்போது 11 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதிநிதித்துவம் சிaறுபான்மை மக்களின் விகிதாசாரத்துக்கு அமைவாக கிட்டுமா என்பதிலும் சந்தேகமுள்ளது.
எனவே, எல்லை நிர்ணய அறிக்கை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் சிறுபான்மை மக்களுக்கு பாதகங்கள் ஏற்படும் விடயங்களைக் குறிப்பிட்டு நீதிமன்றின் தீர்ப்பினை நாடவுள்ளேன்.
வட்டார முறையும் விகிதாசார முறையும் கலந்த புதிய கலப்பு உள்ளூராட்சி தேர்தல் முறையை சிறு கட்சிகளும் சிறுபான்மைக் கட்சிகளும் ஏற்கப்போவதில்லை எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இந்தப்புதிய கலப்பு தேர்தல் முறையின் மூலம் சிறுப்பான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவம் வெகுவாகப் பாதிக்கப்படவுள்ளமையே இதற்குக் காரணம் என்றார்.
இவ் விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ். சுபைதீன் கருத்து தெரிவிக்கையில், எல்லை நிர்ணய அறிக்கை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் அது தொடர்பில் ஆராய்ந்து வழக்குத் தொடர்வதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சட்டத்தரணிகள் குழுவொன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.