தொடரும் நில ஆக்கிரமிப்பும் அம்பாறை முஸ்லிம்களும்

யூ.எல்.ஏ.மஜீட்
சாய்ந்தமருது 14 
அம்­பாறை மாவட்டம் 1940 களில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் நிர்­வா­கத்தின் கீழ் இணைக்­கப்­பட்ட பிர­தே­ச­மாக விளங்­கி­ய­துடன் மேற்­படி மாவட்­டத்தில் வாழ்ந்த முஸ்­லிம்­களின் பெரும்­ப­கு­தி­யா­கவும் விளங்­­கியது.



மேற்­படி மாவட்டம் 3.263 சதுர கிலோ­மீட்டர் நிலப்­ப­ரப்­புடன் சகல வளங்­களும் காணப்­படும் ஒரு பசுமை நிறைந்த பிர­தே­ச­மு­மாகும். 

1925 களில் இப்­பி­ர­தே­சத்தில் வாழ்ந்த முஸ்­லிம்கள், வனாந்­தர காடு­க­ளாக காணப்­பட்ட அம்­பா­றை­யெனும் பூமியை காடு­வெட்டி களனி செய்து துப்­பு­ரவு செய்து கஷ்­டப்­பட்டு பொன் விளையும் பூமி­யாக மாற்­றி­ய­துடன், அக்­கா­லத்தில் கொண்­ட­வோட்டான் எனும் இடத்தில் பள்­ளி­வாசல் ஒன்றை உரு­வாக்கி ஒரு சிறு தொகை முஸ்­லிம்கள் குடி­ய­மர்ந்­த­துடன் விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­ப­ட­லா­கினர். 
1936 ல் சிங்­கள மந்­திரி சபையின் ஊடாக பிரித்­தா­னி­யாவின்1931 ஆம் ஆண்டில் கொண்டு வரப்­பட்ட டொனமூர் அர­சியல் பர­வ­லாக்கல் கார­ண­மாக சிங்­கள பௌத்­தர்­களின் இன­வா­தத்­தோடு இணைந்த அர­சியல் ஆதிக்கம் படிப்­ப­டி­யாக உச்­ச­நி­லைக்கு வர­லா­கின.

இதன் ஊடாக 1944 காலப்­ப­கு­தியில் சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை குறைக்குமுக­மாக கல்­லோயா நீர்ப்­பா­சனத் திட்டம் என்ற பெயரில் அம்­பாறை மாவட்­டத்தில் சிங்­கள குடி­யேற்­றத்தை உரு­வாக்­கி­ய­துடன் அன்று இப்­பி­ர­தேச பா.ம.உறுப்­பி­ன­ராக விளங்­கிய எம்.எம்.மேர்ஸாவை அப்­போ­தைய பிர­தமர் டீ.எஸ்.சேன­நா­யக்க வெளி­நாட்டில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொள்­ள­வென அனுப்­பிய நிலையில் 1952 ல் இர­வோடு இர­வாக மாத்­தறை, காலி, அம்­பாந்­தோட்டை போன்ற இடங்­களில் வாழ்ந்த சிங்­கள மக்­களை குடி­யேற்­றி­ய­துடன் 44 கிரா­மங்கள் உரு­வாக்­கப்­பட்டு 38 கிரா­மங்கள் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் 6 கிரா­மங்கள் தமி­ழர்­க­ளுக்கும் வழங்­கப்­பட்­டன. 
மேற்­படி குடி­யேற்றத் திட்­டத்தை முறி­ய­டிக்கும் முக­மாக சில முஸ்லிம் தலை­மைகள் முற்­பட்­ட­போதும் அது முறி­ய­டிக்­கப்­பட்­ட­துடன் கொண்­ட­வோட்டான் பள்ளி அமைந்­தி­ருக்கும் சிறு நிலப்­ப­ரப்பு மட்டும் போக ஏனைய இடங்கள் அனைத்தும் சேன­நா­யக்க சமுத்­திரம், கல் ஓயா நீர்ப்­பா­சன திட்டம் எனப் பெய­ரி­டப்­பட்டு 1954 ல் அம்­பாறை மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­டது.

அன்­றி­லி­ருந்து இன­வாத நில ஆக்­கி­ர­மிப்­பு­களும் கெடு­பி­டி­களும் இம்­மா­வட்­டத்தில் படிப்­ப­டி­யாக தலை­தூக்க ஆரம்­பித்­தன.

மேலும் இம்­மா­வட்­டத்தில் தீக­வாபி பிர­தே­சத்­துக்கு உட்­பட்ட பல ஏக்கர் நிலப்­ப­ரப்பு முஸ்­லிம்­களின் பரம்­ப­ரை­ ப­ரம்­ப­ரை­யாகக்கொண்டு விளங்­கிய நிலப்­ப­ரப்­போடு மேலும் பல காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்டும் வரு­வ­தனைக் காணலாம். பொத்­துவில், அக்­க­ரைப்­பற்று, இறக்­காமம், சின்ன விசாரை, பள­வெளி, பொத்­தானை, கம்­மடு போன்ற முஸ்­லிம்­களின் காணி­களில் அத்­து­மீ­றிய சிலை­வைப்­புகள் நீதி­மன்ற கட்­ட­ளை­க­ளையும் மீறி சட்­டங்கள் கையில் எடுத்­த­வர்­களாக சில பிக்­குகள் நீதி­யையும் சட்­டத்­தையும் மதி­யாது செயல்­ப­டு­கின்­றனர்.

அக்­க­ரைப்­பற்று நுரைச்­சோ­லையில் சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கென சவூதி அர­சினால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட 500 வீடு­களை 09 வரு­டங்கள் கழித்தும் கூட, பௌத்­தர்­க­ளினால் புண்­ணிய பூமி என்ற பெயரில் வழங்­கக்­கூ­டாது என்ற நீதி­மன்றின் தடை­யுத்­த­ரவு வழங்­கப்­பட்ட நிலையில் பாழ­டைந்த நிலையில் காட்­சி­ய­ளிக்­கின்­றன. 

மேற்­படி மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் சுமார் 1,42,000 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் விவ­சாயம் செய்­கின்­றனர். 1996 ல் இப்­பி­ர­தே­சத்தில் உள்ள முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய சில இடங்­களைக் காட்டி பௌத்த குரு­மார்கள் மறைந்த மு.கா.தலைவர் அஷ்ரபிடம் சென்று மேற்­படி விடயம் சம்­பந்­த­மாக கருத்­து­களை முன்­வைத்­தனர். ஆனால் அஷ்ரப்1000 வரு­டங்­க­ளுக்கு மேல் மேற்­படி காணிகள் முடிக்­கு­ரிய காணி­க­ளாக முஸ்­லிம்­களின் பாவ­னையில் இருந்து வரு­வ­தா­கவும் மேற்­படி விட­யத்தில் ஆதா­ர­மற்ற முறையில் முஸ்­லிம்கள் மீது பழி­களை சுமத்தி சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையே மனக்­க­சப்பை ஏற்­ப­டுத்தவேண்­டா­மென வேண்­டி­ய­தற்கு இணங்க மேற்­படி விடயம் அன்­றோடு கைவி­டப்­பட்­டது. 

மேற்­படி அம்­பாறை மாவட்­டத்தில் பறி­போன முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய காணி­களை மீட்­டுத்­த­ரு­வ­தாக 2001 ஆம் ஆண்டு நாட்டில் நில­விய சமா­தான சூழலில் கூறப்­பட்­டது. ஆனால் 2002 ல் முஸ்­லிம்­களின் காணி­களை மீட்டுக் கொடுப்­ப­தற்குப் பதி­லாக முஸ்லிம் மக்­க­ளி­ட­மி­ருந்து கப்பம், கொள்ளை, கொலை போன்ற விட­யங்­களில் செயற்­ப­ட­லா­யினர்.

2000 ஆம் ஆண்டில் மு.கா.தலைவர் அஷ்ரபின் மறை­வுக்குப் பின்னர் இன­வாத செயற்­பா­டுகள் படிப்­ப­டி­யாக துளிர் விட ஆரம்­பித்த நிலையில் அதனை முளை­யி­லேயே கிள்­ளி­யெ­றியக் கூடிய அல்­லது தடை­செய்­யக்­கூ­டிய அல்­லது அதனை எதிர்த்து குரல்­கொ­டுக்­கக்­கூ­டிய ஒரு துணிவு கொண்ட முஸ்லிம் தலை­மைத்­துவம் அஷ்ரபுக்குப் பின்னர் கிடை­யாமல் போனதன் கார­ண­மா­கவும் இப்­பி­ர­தே­சத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பா.ம.உறுப்­பி­னர்­களின் அச­மந்தப் போக்­குகள் கார­ண­மா­கவும் இன்று இம்­மா­வட்­டத்தில் நன்கு திட்­ட­மி­டப்­பட்ட நிலையில் தமிழ், முஸ்­லிம்­களின் காணி­களில் வெளிப்­ப­டை­யாக எந்த எதிர்ப்­பு­களும் இல்­லாத நிலையில் புத்தர் சிலைகள் அமைக்­கப்­பட்டும் அமைப்­ப­தற்கு முயற்­சி­களும் சிங்­கள பௌத்­தர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தோடு, இதற்கு ஆத­ர­வாக கடந்த பொதுத் தேர்­தலில் முஸ்­லிம்­களின் 20,000 க்கு மேற்­பட்ட விருப்பு வாக்­கு­களைப் பெற்று வெற்றி பெற்ற ஐ.தே.கட்சி பா.மா. உறுப்­பினர் தயா­க­மகே மிகவும் முன் நின்று செயல்­பட்டு வரு­வ­தனைக் காணலாம். 

அன்று மு.கா.தலைவர் அஷ்ரப் என்றால் எல்­லோ­ரி­டத்­திலும் மரி­யா­தை­யோடு கூடிய ஒரு அச்சம் காணப்­பட்­டது. 1994 ல் சந்­தி­ரிகா அரசின் பங்­கா­ளி­யாக இணைந்து செயல்­பட்­டதால் இந்­நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் ஆட்­சி­களை அமைக்­கக்­கூ­டிய சக்­தி­யு­டை­ய­வர்கள், எந்­த­வொரு சிங்­கள அர­சு­களும் அவர்­களை புறம் தள்­ளி­விட்டு ஆட்சி நடத்த முடி­யாது என்­ப­தனை நிரூ­பித்தும் காட்­டினார். ஆனால் இந்­நாட்டில் முஸ்­லிம்­களின் அர­சியல் ரீதி­யான வர­லாற்றை நோக்கும் போது 1915 ஆம் ஆண்டு இடம்­பெற்ற சிங்­கள – முஸ்லிம் இனக்­க­ல­வரம் தொட்டு 1986 கால­வரை ஒரு­வித பீதி­யு­ட­னேயே காணப்­பட்டு வந்­துள்­ளனர். 

இந்­நாட்டில் முஸ்­லிம்கள் தாக்­கப்­படும் போது தாக்­கு­ப­வர்­களை எதிர்த்துப் பேசவும் மோதவும் விரும்­பாத வாயால் கூட எதிர்க்க முற்­ப­டாத நிலை­மைகள் எமது முன்­னைய முஸ்லிம் தலை­மை­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தன. 1938 ல் சேர்.மாக்கான் மாக்கார் போன்ற தலை­வர்கள் அன்­றி­ருந்த அமைச்சரவையில் இருந்­தனர். சேர்.மாக்கான் மாக்கார் அங்கு பேசிய ஒரு­சந்­தர்ப்­பத்தில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு சம­மான பிர­தி­நி­தித்­து­வத்தை நாம் கேட்­க­வில்லை என்று கூறும் அள­வுக்கு பாதிப்­புகள் காணப்­பட்­டன. 

டீ.எஸ்.சேனா­நா­யக்க பிர­ஜா­வு­ரிமைச் சட்­டத்தைக் கொண்டு வந்­த­போது அது முஸ்­லிம்­களை பாதித்த நிலை­யிலும் அதனை முஸ்­லிம்கள் ஆத­ரித்­தனர். 35,000 இந்­திய முஸ்­லிம்கள் இதனால் நேர­டி­யாகப் பாதிக்­கப்­பட்­டார்கள். இலங்கை முஸ்­லிம்­களும் அந்­நி­யர்­க­ளாகக் கரு­தப்­படும் ஒரு நிலைமை வந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக வாய்­மூ­டி­மெ­ள­னி­க­ளாக  அதனை ஆத­ரிக்­கின்ற தலை­மை­க­ளாக இருந்­த­தற்கு காரணம் இந்தப் பீதி மனப்­பான்­மைதான்.

அத்­துடன் 1952 ல் எம்­ம­வர்கள் விட்ட தவ­று­க­ளி­னா­லேயே அம்­பாறை பிர­தேசம் முஸ்­லிம்­களின் பிடி­யி­லி­ருந்து நழுவிச் செல்­ல­லா­கின. இலங்­கையில் வாழும் 20 இலட்சம் முஸ்­லிம்­களின் பெரும் பகு­தி­யாக விளங்­கு­வது மேற்­படி அம்­பாறை மட்­டுமே.

இங்கிருந்­துதான் 1960 களில் முஸ்­லிம்கள் தங்­களை அடை­யா­ளப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளாக அனைத்து இலங்கை இஸ்­லா­மிய அமைப்­பு­களும் இவ்­வாண்டு தோற்றம் பெற்­ற­துடன், முஸ்லிம் மக்கள் தங்கள் இனத்தின் பாது­காப்புக் கருதி இஸ்­லாத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட இன அடை­யா­ளத்தை நிலை­நாட்­டி­ய­துடன் தமிழ் தங்­க­ளு­டைய இயற்­கை­யான மொழி அல்­ல­வென்றும் அது பிற இனத்­தி­லி­ருந்து நடை­முறை கருதி கடன் பெற்ற மொழி என்றும் வரை­வி­லக்­கணம் கொடுத்­தனர்.

இந்த வகையில் அர­பி­ மொழியைத் தங்கள் இயல்­மொ­ழி­யாகக் கொள்­கின்­றனர். இதனைத் தொடர்ந்து 1960 களில் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் தமது பொரு­ளா­தார, பண்­பாட்டு விருத்­தியைக் கண்­ட­துடன் இதன் அடிப்­ப­டையில் தாம் ஒரு தனித்­து­வ­மான சக்­தி­யாக பலம்­பெறலாகினர். இருந்த போதும் 1947 முதல் 1986 வரை இந்­நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த சிங்­கள அர­சு­க­ளோடு இணைந்து செயற்­பட்ட போதும் முஸ்­லிம்­களின் சமூக, அர­சியல், பொரு­ளா­தார, கலா­சார விட­யங்­களில் எந்த தாக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­ய­தாகத் தெரி­ய­வில்லை. இருந்தும் அன்று பாரா­ளு­மன்றை அலங்­க­ரித்துக் கொண்­டி­ருந்த முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் அனை­வரும் சிங்­கள பேரி­ன­வாத அர­சி­யலில் வெறும் கைபொம்­மை­க­ளா­கவே செயல்­பட்­டனர். 

அன்று எந்­த­வொரு முஸ்லிம் பா.ம.உறுப்­பி­னர்­களும் முஸ்­லிம்­க­ளுக்கு  ஆங்­காங்கே சிங்­கள பேரி­ன­வா­தி­க­ளினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அநீ­தி­களை தட்­டிக்­கேட்க துணிவற்­ற­வர்­க­ளா­கவே காணப்­பட்­டனர் என்­பதே முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­வி­தி­யாகக் காணப்­பட்­டது.

இவ்­வா­றான அடக்கு முறை­யி­லி­ருந்து ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தையும் ஒர­ணியில் திரட்டும் முக­மா­கவும் முஸ்­லிம்­க­ளுக்­கென ஓர் தனித்­து­வ­மான அர­சியல் இயக்கம் வேண்டும், முது­கெ­லும்­புடன் பேசு­கின்ற திராணி வேண்டும் என்­றுதான் எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்­லிம்­க­ளுக்­கென முஸ்லிம் காங்­கி­ரஸை ஸ்தாபித்தார். எதற்கும் பயப்­ப­டாமல் எமது உரி­மை­களைத் தட்டிக் கேட்­கின்ற ஓர் ஸ்திர­மான நிலையை தோற்­று­வித்­தது. உண்­மை­யா­கவே இந்­நாட்டில் முஸ்லிம் காங்­கிரஸ் என்று உத­ய­மா­கி­யதோ அன்­றி­லி­ருந்து அஷ்ரபின் மர­ணம்­வரை அஷ்ரப் என்றால் ஒரு மரி­யா­தை­யுடன் கூடிய கண்ணியம் காணப்­பட்­டது.

1994 ல் சந்­தி­ரி­காவின் ஆட்­சியில் பங்­கா­ளி­யாக மு.கா.செயற்­பட்ட போதும் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் முஸ்­லிம்­களின் தனித்­துவம், பேரம் பேசும் சக்தி போன்­ற­வற்றை இழக்கும் வகையில் அஷ்ரப் ஒரு போதும் செயற்­ப­ட­வில்லை. ஆனால் அவரின் மர­ணத்தின் பின்னர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்­றுக்­கொண்­ட­வர்­க­ளினால்  மு.கா.வின் கொள்கை முதல் சகல தனித்­துவ அடை­யா­ளங்­களும் பேரி­ன­வாத அர­சு­க­ளுக்கு தாரை வார்த்துக் கொடுக்­கப்­பட்­ட­துடன் "நக்­குண்டார் நாவி­ழந்தார்" என்ற நிலையில் சிங்­கள அர­சுகள் வழங்கும் இரண்டு அமைச்சர் பத­வி­க­ளுக்­காக சோரம்­போ­ன­வர்­க­ளாக முஸ்லிம் காங்­கி­ரஸை நான்கு கூறு­க­ளாக உடைத்து, முஸ்லிம் சமூ­கத்தை வெறும் ஒரு சடப்­பொ­ரு­ளாக மாற்றி, நடை­மு­றைக்கு சாத்­தி­யப்­ப­டாத பல வாக்­கு­று­தி­களை அள்ளி வழங்கி அவர்­களை நம்­ப­வைத்து ஏமாற்றும் ஒரு ஸ்திர­மற்ற ஓர் அர­சி­ய­லையே நாம் தற்­போது அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.

இந்­நாட்டில் சம­கால அர­சி­யலில் முஸ்­லிம்­களின் மத்­தியில் தோன்­றிய அர­சி­யல்­வா­தி­களில் பாரா­ளு­மன்­றிலும் அதன் வெளி­யேயும் முஸ்­லிம்­க­ளுக்­காக மிகவும் துணி­வோடும் எந்த அச்­ச­முமின்­றியும் குரல் எழுப்­பி­யவர் என்றால் அது அஷ்ரப் தான் என்றால் மிகை­யா­காது.

ஆனால், 2010 ஆம் ஆண்டு முதல் இன்­று­வரை இன­வா­தி­க­ளினால் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான எத்­த­னையோ வன்­மு­றைகள் அரங்­கேற்­றப்­பட்டன. அரங்­கேற்­றியும் வரு­கின்­ற­னர். ஆனால் இவற்­றுக்­கெ­தி­ராக எந்த முஸ்லிம் பா.உறுப்­பி­னர்களும் மிகவும் துணிவு கொண்டு  அதனை தடுக்கும் வகையில் காட்­ட­மா­ன­தொரு கண்­ட­னம் அல்­லது குரல் கொடுத்­தார்­களா என்றால் இது­வ­ரை­யிலும் அது­வெறும் பூஜ்யம் மட்­டும்தான்.

கடந்த ராஜபக் ஷ அரசில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் இனிமேல் ஒரு போதும் இடம்­பெ­றக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே கடந்த 2015 ல் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது பூரண நம்­பிக்­கை­யுடன் தமிழ், முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளினால்  இந்நாட்டில்  நல்­லாட்­சியை அமர்த்­த­லா­னார்கள்.  

ஆனால்  1 - 1/2 வரு­டங்கள்  சமா­தான காற்றை சுவா­சித்த நிலையில் நாங்கள் அனை­வரும் ஒரே புற்றில் வளர்ந்த பாம்­பு­கள்தான் என்­ப­தனை பறை­சாற்றும் வகையில் தற்­போ­தைய நல்­லாட்­சி­யிலும் இன­வாத கெடு­பி­டிகள் சற்றும் ஓய்­வில்­லாமல் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இடம்­பெற்ற வண்ணம் உள்­ளன.

கிழக்கில் 54 இடங்கள் தொல்­பொருள் இட­ங்களாக இனம் காட்­டப்­பட்­டுள்ள நிலையில் மேலும் 300 க்கும் மேற்­பட்ட இடங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் அதனை பாது­காக்கும் வகையில் பொலி­ஸா­ரையும் சிவில் பாது­காப்புப் பிரி­வி­னர்­க­ளையும் பயன்­ப­டுத்தப் போவ­தா­கவும் அண்­மையில் ஜனா­தி­பதி அறி­வித்­துள்ளார்.

மேற்­படி அறி­வித்­த­ல் கிழக்கில் குறிப்­பாக அம்­பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் மத்தியில் பாரிய அச்சத்தையும் ஒரு விதமான சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன. 

மேற்படி இனவாத கெடுபிடிகள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் பாரம்பரிய நிலப்பரப்புகள் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக இனவாத  அடக்கு முறைக்குள் காவு கொள்ளப்படும் ஒரு நிலையை காணக்கூடியதாய் உள்ளது.இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக விளங்குவது எம்மவர்கள் அன்று விட்டதவறும் இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமையற்ற சீரழிந்த, அரசியல் ஸ்திரமற்ற, எந்தக் கொள்கைகளுமற்ற செயற்பாடுகளே.

இனவாதப் போக்குடையவர்கள் எம்மை மிகவும் இலகுவாக தாக்குவதற்கு வழி சமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதுதான் யதார்த்தமாகும்.

எது எப்படியிருப்பினும் இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்களை முறியடிக்க வேண்டுமாயின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் துஆப் பிரார்த்தனையோடு கூடிய பொறுமையும் இன்று சின்னாபின்னமாக பிரிந்து சிதறுண்டு கிடக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் சன்மார்க்க போதகர்களும் ஒன்று பட்டால் மட்டுமே முஸ்லிம் சமூகம்  இதிலிருந்து விடுதலையடைய முடியும்.

அவ்வாறு ஒரு நிலை ஏற்படாத நிலையில் இன்னும் ஐம்பது வருடங்கள் சென்றாலும் இனவாதிகளின் ஆக்கிரமிப்பு போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.