ஹக்கீமிற்கு எதிரான கூட்டமல்ல இது. ஹக்கீமை திருத்துவதே எமது நோக்கம்!



களத்திலிருந்து புவி றஹ்மதுல்லாஹ்
மு.கா. முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸனலி
தலைவர் அஸ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில்தான் இன்னமும் நான் இருக்கிறேன். அதனால்தான் இந்தக் கூட்டத்திற்கும் நான் கட்சியின் தொப்பியைப் போட்டுக்pந்து கொண்டும், கட்சியின் சீருடையான மஞ்சள் நிற ரீஷேர்ட்டை அணிந்து கொண்டும் வந்திருக்கின்றேன்.
இக்கட்சிக்காக தியாகத்துடன் செயற்பட்டு வந்த நான் அநியாயமாக தலைவரினால் பழி வாங்கப்பட்டு செல்லாக்காசாக இன்று செயலாளர் நாயகம் என்ற பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டிருக்கின்றேன்.
இது, தலைவருக்கு எதிராக நான் கூட்டியுள்ள கூட்டமல்ல. மாறாக, தலைவரைத் திருத்துவதற்காக எனது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டமேயாகும்.
நான் ஒரு போதும் இக்கட்சிக்குத் தலைமை தாங்க ஆசைப்பட்டவனல்ல. மாறாக, இக்கட்சியைத் தோற்றுவித்த அம்பாரை மாவட்டத்திற்கு சகல அதிகாரமும் கொண்ட செயலாளர் நாயகம் பதவி வழங்கப்பட வேண்டும் என்றே குரலெழுப்பி வந்துள்ளேன்.
இகட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை விடவும், மாகாண சபை உறுப்பினர்களை விடவும், உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை விடவும், அரசியல் உயர்பீட உறுப்பினர்களை விடவும் நான் ஒருவனே தலைவருக்கு பிரச்சினையானவனாக இருந்து வந்திருக்கிறேன். அதனால்தான் தருணம் பார்த்து நான் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன்.
நான் தேசியப்பட்டியல் எம்.பி. பதவியையோ அல்லது ஏனையவர்கள் எதிர்பார்க்கின்றவாறு சொந்த அரசியல் இலாபங்களையோ எதிர்பார்த்திருந்தால் நானும் தலைவரோடு, அவரின் தன்னாதிக்கச் செயற்பாடுகளோடு இணங்கிப் போயிருப்பேன். ஆனால், நான் முஸ்லிம் சமூகத்திற்குத் துரோகமிழைக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு கால கட்டங்களிலும் தலைவரோடு முரண்பட்டுள்ளேன். அதனால்தான் இன்று இவ்வாறு பழிவாங்கப்பட்டுள்ளேன்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் நான் மூன்று நாட்கள் ஒளித்தோடி விட்டதாக தலைவர் குற்றம் சாட்டுகிறார். நான் ஒளித்திருந்ததால் கட்சி நடவடிக்கைகள் எதுவும் முடங்கிப் போய்விடவில்லை. எல்லாம் அவரது நிகழ்ச்சி நிரலின்படி நடந்து கொண்டுதான் இருந்தன.
கிழக்கு மாகாண சபை ஒன்றுதான் முஸ்லிம் சமூகத்திற்கு அடித்தளமான ஒரே சபையாகும். அதில் நமது கட்சி மரச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். கிழக்கு மாகாணத்திலும் மாற்றுக் கட்சிகளின் சின்னத்திற்கு வாக்களித்து முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை அடையாளம் இழக்கச் செய்யக்கூடாது என்பதற்காகவே நான் தலைமறைவாக இருந்தேன்.
கிழக்கு மாகாண சபைக்கு 'திவிநெகும திருத்தச் சட்டமூலம்' கொண்டு வரப்பட்டபோது நான் அதனை வன்மையாக எதிர்த்தேன். தலைவர் அப்போது வெளிநாட்டில் இருந்து கொண்டு மாகாண சபை உறுப்பினர்களை வழிநடாத்தினார். இறுதியில் மாகாண சபை உறுப்பினர்கள் அவர்களின் தொலைபேசிகளை மூடி வைத்து விட்டு அச்சட்ட மூலத்திppற்கு ஆதரவாக வாக்களித்தனர். இது தொடர்பில் நான் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது, தலைவர் அதனைக் கிடப்பில் போட்டு உறுப்பினர்களைப் பாதுகாத்தார்.
'திவிநெகும' சட்ட மூலம் அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் ஒரு பாதகமான சட்டமாகும் என்பதை தலைவரும் அறிந்தே இருந்தார். எனினும் அவரது அமைச்சுப் பதவியைப் பாதுகாப்பதற்காக அவர் முஸ்லிம் சமூகம் தெரிவு செய்த உறுப்பினர்களைப் பலிக்கடாக்களாகப் பயன்படுத்தினார்.
அச்சட்ட மூலம் தொடர்பில் சிறுபான்மை மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு தீர்ப்பு வழங்கிய முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தபோது, அதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தலைவர் பணித்தார்.
நான் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து கடுமையாக வாதாடி மறுப்புத் தெரிவித்தபோது தானும் வாக்களிக்க மாட்டேன் என்று என்னிடம் உறுதியளித்தார். ஆனால், அந்த வாக்குறுதிக்கு மாற்றமாக அவரும் நாடாளுமன்றத்திற்குச் சென்று வாக்களித்தார்.
கெசினோ சூதாட்டச் சட்டமூலம் கொண்டு வந்தபோதும் நான் கடுமையாக எதிர்த்தேன். அது தொடர்பில் குர்ஆன் ஹதீஸை யாப்பாகக் கொண்டியங்கும் நமது கட்சி காட்டமான அறிக்கைகளையும், எதிர்ப்புக்களையும் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் தலைவர் மகிந்தரின் ஆட்சியையும், தனது மந்திரிப் பதவியையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஷரீஅத்திற்கு முற்றிலும் முரணான அச்சட்ட மூலத்திற்கு எதிராக்க குரல் எழுப்ப விடாதவாறு எம்மை அடங்கியிருக்குமாறு அறிவுறுத்தினார்.
18வது திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டபோது, கரையோர மாவட்டத்திற்கான வர்த்தமானி அறிவித்தலை பஸில் ராஜபக்ஷவிடம் பெற்றுக் கொண்டு ஆதரவளிக்குமாறு தலைவர் வழிகாட்டினார். அவரை நாம் சந்திக்கச் சென்றபோது ஒவ்வொரு எம்.பி. மாரும் அவரவர் வேலைத்திட்டம், வாகன விவகாரம் போன்றவற்றையே பஸில் ராஜபக்ஷவிடம் கோரிக்கையாக முன்வைத்தனர்.
கடைசியாக என்னிடம் கேட்டபோது தலைவர் சொல்லி அனுப்பிய கரையோர மாவட்டத்திற்கான வர்த்தமானிப் பிரகடன ஆணைப்பத்திரத்தை நான் கேட்டபோது அவர் அதிர்ச்சியடைந்தார். அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அதனை எதிர்ப்பதாக பஸில் சொன்னபோது, எமது எம்.பி மார்கள் 'கரையோர மாவட்டமும் மசிரும்.. இதைக் கொண்டு வந்து இந்த நேரத்தில் இவர் கேட்கிறார்' என்று ஏளனமாகவும், ஆத்திரத்துடனும் கூறினர்.
இறுதியாக, ஒரு ஆட்சி மாற்றத்தை இந்நாடு காண விரும்பியபோது, அதற்காக முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து முன்வந்தபோது தலைவர் மகிந்தரை ஆதரிப்பதையே குறியாகக் கொண்டு காலங்கடத்தினார். நானும், எனது ஆதரவாளர்களும் எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக தீர்மானம் எடுத்ததை இரவோடிரவாக அறிந்த தலைவர் பின்னர் தானும் இணைந்து கொண்டு மைத்திரிக்கு ஆதரவு வழங்க தபால் வாக்களிப்பும் நடைபெற்று முடிந்த பின்னரே முன்வந்தார்.
மகிந்தரின் கட்டளைகளுக்கு முன்னுரிமையளித்து தனக்கு வழங்கப்பட்ட மந்திரிப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே தலைவர் குறியாக இருந்து முஸ்லிம் சமூகத்தை அடகுவைத்து வந்தார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவருடன் தர்க்க்கித்து முரண்பட்டு நின்றபோதெல்லாம் அவருக்கு நானே பெரும் தலைவலியாக இருந்தேன். என்றாலும் அவரைத் திருத்தலாம் என்கிற நம்பிக்கை எனக்கு இன்னமும் இருக்கிறது. - இவ்வாறு அவர் தொடர்ந்து பேசினார்.