கிழக்கில் மதுபானசாலை அமைக்க விடமாட்டேன்;கிழக்கு முதலமைச்சர் சூளுரை

NEWS
எந்த மட்டத்திலிருந்து  அழுத்தங்கள்  வந்த  போதிலும்  கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகளை அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ நசீர் அஹமட்  சூளுரைத்துள்ளார்.கிழக்கில் ஏற்கனவே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில்  எம் இளைய சமூகத்தினரின் எதிர்காலம் கண்முன்னே சீரழிக்கப்படும் போது  அதை கைகட்டி வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதற்கு  தாம் ஒரு போதும் தயாரில்லை என கிழக்கு முதலமைச்சர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இன்று (30) கலந்து  கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
இதன் போது  தொடர்ந்தும்  கருத்து  தெரிவித்த கிழக்கு முதலமைச்சர், கிழக்கு மாகாணத்தை  போதையற்ற  மாகாணமாக்குவதை இலக்காக் கொண்டு  இந்த வருடத்தின்  ஆரம்பம் முதல்  நாம்  பல்வேறு  நடவடிக்கைகளை  முன்னெடுத்து வந்தோம்.

இந்நிலையிலேயே  இன்று கல்குடாவில் எரிசாராய உற்பத்தி நிலையமொன்றை  உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன,தற்போது  இதற்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கிய கப்பலொன்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக  அறிகின்றேன். ஆகவே இந்த கப்பலில் இருக்கும் எந்தப் பொருளும் கல்குடாவுக்கு  கொண்டுவரப்படுவதற்கு  நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்பதை   மிகத்  தௌிவாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

அத்துடன் தான் முதலமைச்சராக இருக்கும்  வரை  மதுபான உற்பத்திசாலைகளுக்கு  ஒரு  போதும் இடமளிக்கப் போவதில்லை,உயர் மட்டத்தினூடாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம்,எந்த நிலை தோன்றினாலும் இந்த மதுபான உற்பத்தி சாலை  கிழக்கில் நிர்மாணிக்கப்படாது என்ற உறுதியை வழங்க  வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த  மதுபான உற்பத்திசாலைகள் தொடர்பிலான  நபர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை நாடலாம் ஆனால் அதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு போதும் துணை போக மாட்டார்கள் என நான் நம்புகின்றேன். ஏற்கனவே  போரினாலும்  வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும்  எமது மக்களின் வாழ்வாதாரம் நலிவடைந்து போயுளளது இந்நிலையிலேயே  மதுபான உற்பத்திசாலைகளை நிறுவி  மேலும் அதனை சீரழிப்பதற்கு இந்த  மண்ணில் பிறந்தவன் என்ற வகையில் என்னால்  ஒரு போதும்  இடமளிக்க  முடியாது.

தற்போது இந்த  மதுபான உற்பத்திசாலையின்  நடவடிக்கைகளை எதிர்காலத்திலும்  எந்தவொரு அரசியல் சூழ்நிலையின் கீழும் நிறுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் தற்போது நீதிமன்றத்தை நாடி அதற்கான  நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.
Tags
3/related/default