அஸ்லம் மௌலானா
"முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எனக்கு இழைத்துள்ள அநியாயங்களை புனித மக்காவுக்கு சென்று அல்லாஹ்விடம் முறையிட்டுள்ளேன். அதற்குரிய தீர்ப்பை வழங்கும் பொறுப்பை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன்" என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்; "தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் என்னையும் சமூகத்தையும் கடுமையாக ஏமாற்றியுள்ளார். இதனால் நான் மிகவும் நொந்து துன்பப்பட்டேன்.
இந்த அநியாயங்களை உம்ராவுக்கு சென்று புனித மக்காவில் அல்லாஹ்விடம் ஒப்படைத்துள்ளேன்.
இனி அந்த வல்ல நாயகன் அல்லாஹ் பார்த்துக் கொள்ளட்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தலைமைக்கு அடுத்த அதிகார நிலையில் இருந்த செயலாளர் நாயகம் பதவி இன்று தலைமைத்துவத்தினால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பதவிக்குரிய அதிகாரங்கள் யாவும் தலைமையினால் கையகப்படுத்தப்பட்டு செயலாளர் எனும் பதவிக்குரியவர் தலைமையின் கால்களில் மண்டியிடச் செய்யப்பட்டுள்ளது என்றார்.
