விவசாயிகளின் காணிகளை விடுவிக்குமாறு சுபையிர் Mpc கோரிக்கை

எம்.ஜே.எம்.சஜீத்

ஏழை விவசாயிகளின் காணிகளை விடுவிக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மன்றாட்டம்
 
பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக விவசாயக் காணிகளையும், அது தொடர்பான ஆவணங்களையும் இழந்து நிர்க்கதிக்குள்ளான ஏறாவூர் பிரதேச விவசாயிகள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையில் தங்களது காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கணைப்புக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் எம்.எஸ் அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் இணைத்தலைமையில் (27) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது வருடாந்த காணி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் தொடர்பாக ஏறாவூர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை ஒன்றினை சமர்ப்பித்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்தில் வாழும் அனேகமான மக்கள்  தங்களது பாரம்பரிய தொழிலாக விவசாயத்தையே மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட பயங்கரவாத சூழ்நிலை காரணமாக கட்டுக்களியா, மரப்பாலம், பூமாச்சோலை, சேனமடு, உன்னிச்சை போன்ற இடங்களில் வாழ்ந்த மக்கள் தங்களது விவசாயக் காணிகளையும், அது தொடர்பான ஆவனங்களையும் இழந்த நிலையில் பாதுகாப்புத் தேடி உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து மேற்குறித்த விவசாயிகள் அக்காணிகளின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாமல் போனது அதன் பின்னர் எமது நாட்டிலே தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழலில் அவ்விவசாயிகள் தங்களது பிரதேசங்களுக்குச் சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போது ஏறாவூர் பிரதேச செயலாளரினால் அவர்கள் தடுக்கப்படுகின்றனர். 

கடந்த காலங்களில் காணி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காததன் காரணமாகவே பிரதேச செயலாளர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.. குறிப்பாக 2008ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் விவசாயக் காணிகளுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டும் எமது மக்கள் அதில் தெளிவில்லாததன் காரணமாக அவ்வாய்ப்பையும் தவறியதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான காணிகளையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த விடயத்தினை கவனத்திற்கொண்டு பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளின் வாழ்வாதார நன்மை கருதி காணி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கும், அவர்கள் தொடர்ந்தும் அக்காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவும், மாவட்ட அபிவிருத்திக்குழு அனுமதி வழங்க வேண்டும் எனவும் மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.