சம்பல்-ராம்பூர் நெடுஞ்சாலையில் பலெளலா என்ற கிராமத்தில், ஹுக்கா என்ற நீளமான புகை பிடிக்கும் குழாயைப் பிடித்துக்கொண்டு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் சிலர் பெருமூச்சு விட்டுக்கொண்டு, ஆட்சிக் கட்டிலில் ஏற்பட்ட மாற்றம் குறித்து விவாதிக்கின்றனர். Image captionஉத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர்
பணமதிப்பு நீக்க நடவடிக்கை முதல் மாட்டிறைச்சி தடை வரை பேசுவதற்கான நிறைய விஷயங்கள் அவர்களிடம் இருக்கின்றன. தற்போதைய நிலவும் சூழ்நிலைகள் குறித்து அவரவர் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.
இது வெட்டி அரட்டை இல்லை, மாட்டை வெட்டுவதற்கான தடை குறித்து கவலைப்படும் அரட்டை.
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் இமாலய வெற்றி, யோகி ஆதித்யநாத்துக்கு சிம்மாசனத்தில் அமரும் யோகத்தை கொடுத்துவிட்டது என்று சொல்லும் தெளஸிஃபுர் ரஹ்மான், "சட்ட விரோத" இறைச்சிக்கூடங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, ஹிந்து மதத்தோடு தொடர்புபடுத்துகிறார்.
இந்தியா இந்து நாடா?
இனிமேல் இந்திய நாடு என்று சொல்வதைவிட இந்து நாடு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அதை நோக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் வருத்தப்படுகிறார்.
ரஹ்மானின் கூற்றுக்கு தலையாட்டுவது அங்கிருக்கும் வெகு சிலர் மட்டுமல்ல, இதே எண்ணம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் முணுமுணுக்கப்படுகிறது. ஒரு சாதாரண குடிமகனின் எண்ணம் இதுவாக இருந்தால், இஸ்லாமியத் தலைவர்களின் மனப்போக்கு எப்படி இருக்கும்? இது முன்பிருந்தே இந்து நாடு தான் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
சம்பலில் இருந்து சமாஜ்வாதி கட்சியின் சார்பில், ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான இக்பால் மஹ்மூத், "விடுதலைக்கு முன்பிருந்தே இந்தியா இந்து நாடு தான்"என்கிறார்.
"இந்து மதத்தில் என்ன இருக்கிறது?" இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். எப்போதுமே, அவர்களுடைய ஆட்சிதான் அமைந்திருக்கிறது. இதுவே எதிர்காலத்திலும் தொடரும். இஸ்லாமியர்களோ, வேறு சிறுபான்மையினரோ பிரதமராக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. இந்து நாட்டில் இந்துக்களே பிரதம மந்திரியாக மகுடம் சூடுவார்கள்" என்கிறார்.
உண்மையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் அதிரடி வெற்றிக்கு பின் முதலமைச்சராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத் பிறப்பித்த அரசக் கட்டளைகள் அதிரடியாக அமலாக்கப்பட்டதால் இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே அச்சம் நிலவுகிறது.
தேர்தல் பரமபத ஏணியில், வெற்றிப்படிக்கட்டில் கிடுகிடுவென பாரதீய ஜனதா கட்சி ஏறினால், அது முஸ்லிம் சமுதாயத்தினருக்கோ பரமபத பாம்பு வாயில் சிக்கி கீழே இறங்கிய கதையாகிவிட்டது. 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நிலவிய சூழ்நிலையுடன், இந்த நிலைமை ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.
Image captionகாஜியாபாதில் சுமார் 100 இறைச்சி விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன
இறைச்சிக்கூடங்களை சட்டவிரோதமானது என்று அறிவிப்பது, அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவது குறித்த அறிக்கைகள் தூசி தட்டப்பட்டு எடுக்கப்படுவது போன்றவற்றால் முஸ்லிம்களிடையே அச்ச உணர்வு தலை தூக்கியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக, பாதுகாப்பு இல்லாதவர்களாக உணர்கிறார்கள்.
தங்கள் அதிகாரம் பறிக்கப்படுவதாக நினைக்கும் அவர்கள், இரண்டாம் தர குடிமக்களாகிவிட்டதாக கருதுகிறார்கள்.
ராம்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரான ஆஸம் கான், ஒரு காலத்தில் தொடர்ந்து தேர்தலில் வென்றவர்; முந்தைய ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்தவர். "முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் செல்வதற்கான வாய்ப்பு இருந்ததபோது அதை தவறவிட்டாயிற்று. இப்போது இங்கே தங்குவதற்கு என்ன நியாயத்தை சொல்லமுடியும்" என்ற கேள்விகள் கேட்கப்படுவதாக அவர் கூறுகிறார்.
பெயரைச் சொல்லவே பயம்
பிறரிடம் தங்கள் பெயரைச் சொல்லவே முஸ்லிம்கள் அஞ்சுவதாக ஆஸம்கான் சொல்கிறார். "நெறிகளின்படி இந்தியா ஓர் இந்து நாடு. இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் அவர்களைப் பொருத்தவரையில் இது ஒன்றும் புதிதில்லை".
"ஆனால், இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள் புதிதல்ல, பல காலமாக தொடர்ந்து நடைபெற்றுவருவதுதான். அவர்களை இரண்டாம், மூன்றாம் தர குடிமக்களாக தரம் குறைப்பது தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டம். முஸ்லிம்களின் மதிப்பு குறைந்து வருவது ஒரு பக்கம் இருக்கட்டும், தங்கள் பெயரை சொல்வதற்குக் கூட அச்சப்படும் நிலைமையில்தான் இன்று அவர்கள் இருக்கிறார்கள்."
மக்கள் தொகை அடர்த்தியாக இருக்கும் உத்தரப்பிரதேசத்தில், முஸ்லிம் மக்கள் இருபது சதவிதத்தினர் அதாவது நான்கு கோடி என்ற அளவில் இருக்கின்றனர். அண்மையில் நடைபெற்ற 403 சட்ட மன்ற தொகுதிகளுக்கான தேர்தலில், முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை கூட பாரதீய ஜனதா கட்சி களம் இறக்கவில்லை.
முஸ்லிம்களிடம் பாரதீய ஜனதா கட்சி வெளிப்படையாக வாக்கு சேகரிக்கவில்லை என்றாலும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. சென்ற சட்டமன்றத்தில் 65 உறுப்பினர்களை கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவம் 23 ஆக சுருங்கிவிட்டது, அதுவும் சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்கள்தான் வெற்றி பெற்றார்கள்.
ஆளும் கட்சியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாததால், தங்களுக்கான ஆதரவு குறைந்துவிட்டதான மனப்போக்கும் முஸ்லிம்களிடையே நிலவுகிறது.
பாரதீய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான ஷிவ் பஹதுர் சக்சேனா மட்டுமே, சட்டமன்றத் தேர்தலில் ஆஸம் கானிடம் தோற்று இரண்டாம் இடத்தை பிடித்தவர். இதுநாள் வரை தங்கள் மனம் போன போக்கில் செயல்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் இனிமேல் அது சாத்தியமில்லை என்பதாலேயே கவலைப்படுவதாகக் கூறுகிறார்.
Image captionமுஸ்லீம்களை பாஜக தலைவர் ஷிவ் பஹதுர் சக்சேனா வரவேற்கிறார்
"இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் ராம்பூரில் இருபது இந்துக்களின் வீட்டைச் சுற்றி முஸ்லிம்களின் வீடுதான் இருக்கிறது. முஸ்லிம்கள் அவர்களுக்கு நெருக்குதல் கொடுத்து வந்தார்கள், இப்போது தங்களுக்கான அரசு அமைந்துவிட்டது என்று அந்த இந்துக்கள் ஆசுவாசப்படுகிறார்கள்" என்கிறார் சக்சேனா.
"இத்தனை நாட்களாக ஆளுமை செய்தவர்கள்தான், இனிமேல் அதை தாங்கள் எதிர்கொள்ள நேருமோ என்று அஞ்சுகிறார்கள்" என்றும் அவர் சொல்கிறார்.
முஸ்லிம்களின் பயம் என்ன?
ஆனால், உத்தரப்பிரதேச மாநில முஸ்லிம்கள் பாரதீய ஜனதா கட்சியிடம் பயப்படுகின்றனர். ராம்ப்பூரில் இருக்கும் சிலரிடம் பாரதீய ஜனதா கட்சியைப் பற்றி கேட்டோம். மொஹம்மத் இக்பால் என்பவரின் கருத்து இது, "முஸ்லிம்கள் அவர்களை நெருங்க முனைந்தால், அவர்கள் வித்தியாசமாக பார்ப்பதால் இடைவெளி மேலும் அதிகமாகிறது. பசு பாதுகாப்பு, மும்முறை தலாக் போன்ற பல முக்கியம் வாய்ந்த, சிக்கல் நிறைந்த விவகாரங்களை தீர்த்துவிட்டால், அவர்களிடையே நெருக்கம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது."
ஆனால் முரண்பட்ட கருத்தை கொண்டிருக்கும் அவரது கூட்டாளியான ஹமீத் அலியின் கருத்துப்படி, முஸ்லிம்கள் பாரதீய ஜனதா கட்சியை நெருங்க விரும்பவில்லை. தேர்தலில் போட்டியிட பாரதீய ஜனதா கட்சியில் வாய்ப்புக் கிடைக்குமா? என்று கேள்வியெழுப்புகிறார் ஹாமீத் அலி. பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து, தேர்தலில் போட்டியிடுங்கள். அந்தக் கட்சியிடம் உங்களை விற்றுவிட்டால் என்ன நடக்கும்?" எனக் கேட்கிறார்.
இதற்கு காரணம் முஸ்லிம் தலைவர்கள்தான் என்று குற்றம் சாட்டும் ஹமித் அலி, "உண்மையில் நமது தலைவர்கள் தான் நம்மை பிரிக்கிறார்கள், பாரதீய ஜனதா கட்சி முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தால், அதை வைத்து பெரிய அரசியல் சதுரங்க விளையாட்டை விளையாடுவார்கள் அவர்கள்" என்கிறார்.
படத்தின் காப்புரிமைAFPImage captionஉத்தரப்பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட யோகி ஆதித்யநாத்
முஸ்லிம்களை வரவேற்க தமது கட்சி தயாராக இருப்பதாக சொல்கிறார் மாநில அமைச்சராக இருமுறை பதவி வகித்திருக்கும் ஷிவ் பஹதுர் சக்சேனா. "அவர்கள் எங்களை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், நாங்கள் ஈரடி எடுத்து வைத்து அணைத்துக் கொள்ளத் தயாராக இருக்குகிறோம். முதலில் அதற்கான முயற்சியை செய்யுங்கள்… ஆனால், உத்தரப்பிரதேச முஸ்லிம்களின் அணுகுமுறை மாறவேண்டும்" என்கிறார் அவர்.
அணுகுமுறை, மனப்பாங்கு மாறுவது என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை சக்சேனா சொல்லவில்லை என்றாலும், பாரதீய ஜனதா கட்சியின் மீது நம்பிக்கை வைக்கச் சொல்கிறார் அவர். "அனைவரோடும் சேர்ந்து, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே பிரதமரின் முழக்கம். இதில் முஸ்லிம்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்" என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.
பாஜக உறவுதான் பயத்துக்கு பரிகாரமா?
பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லிம்களுக்கு கவலை வந்துவிட்டது. ஒரு சுயபரிசோதனை தொடங்கிவிட்டது. பாரதீய ஜனதாவை முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்று சொன்னால், "முஸ்லிம்களின் தோழன்" என்று கூறிக்கொள்ளும் கட்சிகள் அந்த சமுதாயத்திற்காக செய்திருக்கும் நன்மைகள் என்ன?
சம்பலில் வசிக்கும் முதியவர், ஷஃபியுர் ரஹ்மான், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர். நான்குமுறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அண்மையில் அகில இந்திய இத்துஹாதுல் முஸ்லமின் கட்சியில் இணைந்தார்.
சமாஜவாதி மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகள், முஸ்லிம்களை அடிமைகளைப் போன்று பயன்படுத்துவதாக வருந்துகிறார் ரஹ்மான். "இந்தக் கட்சிகள் முஸ்லிம்களை கொத்தடிமைகள் போன்றே நட்த்துகின்றன, ஒருபோதும் தங்களுக்கு சமமாக நடத்துவதில்லை. இதனால் முஸ்லிம்களிடையே நிலவும் ஏழ்மை, வேலையின்மை, கல்வியின்மை, பயிற்சியின்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை" என்று கவலையுடன் கூறுகிறார்.
86 வயதாகும் பர்கீஸ் ஆரோக்கியமானவர். முஸ்லிம்களின் மத, தார்மீக அறநெறிகள் பலவீனமாகிவிட்டதாக கூறும் அவர், நேர்மை, விசுவாசம், உண்மை பேசும் பழக்கம் என்பது ஒருகாலத்தில் முஸ்லிம்களின் அடையாளமாக அறியப்பட்டதை நினைவுகூர்கிறார்.
படத்தின் காப்புரிமைYOGIADITYANATH
தங்களது அடிப்படை குணாம்சங்களான இந்த மூன்று பண்புகளையும் மீட்டெடுத்தால் தான் முஸ்லிம்களுக்கு மீண்டும் மரியாதை கிடைக்கும் என்று கருதும் அவர், மறுபுறம் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் மோதல் போக்கு மறைந்து, சுமுக போக்கு ஏற்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
இந்தக் கருத்தை தலைவர்களும், பொது மக்களும் வரவேற்கின்றனர். முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாகவும், குழுக்களாகவும் பிரிந்து கிடப்பது பற்றி விவாதிக்கப்படுகிறது. இதனால் முஸ்லிம்களின் வாக்கு வங்கியும் பிரிந்து போகிறது.
தேர்தல்களில் எந்தவொரு கட்சிக்கும் வாக்கு வங்கி இருக்கக்கூடாது என்று பலர் கருதுகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் தன்வீர் அலி என்பவரின் கருத்துப்படி, ஒரு தொகுதியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளருக்கே, முஸ்லிம் சமூகத்தினர் வாக்களித்தால் வாக்குகள் பிரியாது.
முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் பணி
ஆஸம் கான், ஒற்றுமைக்கான உறுதி கொண்டவராக இருந்தாலும், முஸ்லிம்களை துரோகிகள் என்று சொல்பவர்களை சேர்த்துக் கொள்ளமுடியாது என்று சொல்கிறார். இந்தப் பட்டியலில் அஸ்தவுதீன் ஓவைசி, தில்லியின் ஜமா மசூதியின் இமாம் அஹ்மத் புகாரி மற்றும் உலமா கவுன்சில் போன்றவர்களை சேர்க்கிறார்.
Image captionஆஸம் கான்
ஆனால், பெரும்பான்மையான முஸ்லிம்களில், வர்க் மற்றும் மஹ்மூத் போன்ற தலைவர்களின் கருத்துப்படி, முஸ்லிம்களிடையே ஒற்றுமையில்லை. மதச்சார்பற்றவர்களுடன் முஸ்லிம்கள் முழுமையாக இணையவேண்டும். ஆனால் சொல்வது சுலபம், செயல்படுவது கடினம்.
யாகாவாராயினும் நா காக்க
மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் இன்றைய சூழலின் முதல் தேவை என்கிறார் ஹமித் அலி. "பாரதீய ஜனதா கட்சியினர் தங்கள் நாவைக் கட்டுப்படுத்தி, அன்பாக பேசினால் போதும், இதயத்தை புண்படுத்தும் வார்த்தைகளை அவர்கள் வெளிப்படுத்தாமல் இருக்கவேண்டும். இதயங்களை உடைப்பது நல்லதல்ல, அன்போடு, ஆதரவுடன் அரவணைத்து செல்வதுதான் இன்றைய தேவை" என்று பாரதீய கட்சியினரிடம் கேட்டுக்கொள்கிறார் ஹமித் அலி.
அலி தமது சமூகத்தை சேர்ந்தவர்களிடமும் ஒரு கோரிக்கையை வைக்கிறார், "நம்மை பிரித்தாள அனுமதிக்கக்கூடாது, நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம். பாரதீய ஜனதா கட்சியில் இணைய விரும்புபவர்களை தடுக்கவேண்டாம்."
Sri Lanka Tamil Islamic Digital Media for Dawah, Sri Lanka Moor News and Culture and Tradition, Politics,Culture, Awareness and helping people. Muslim News in English, Arabic, Sinhala. First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform
0 கருத்துகள்