யாழ் மாவட்டத்தின் யாழ் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட இளைஞன் ஒருவரது சடலம் தொடர்பில் மர்மம் நீடிக்கின்றது.
இன்று(18) காலை மீட்கப்பட்டதாக தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலமாக வைக்கப்பட்டுள்ள 19 வயதுடைய ஜே 86 கிராம சேவகர் பிரிவினை சேர்ந்த பச்சைப் பள்ளி வீதியில் வசித்த முஹமது ஜாஸீன் அஸ்வர் என்பவரது மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
குறித்த இளைஞனது மரணம் எங்கு இடம்பெற்றது எப்படி அவர் இறந்தார் இறக்கும் போது என்ன நிலையில் காணப்பட்டார் என்ற விடயங்கள் தொடர்பில் முன்னுக்கு பின்னான முரண்பாடுகளே காணப்படுகின்றது.
இவ்விளைஞன் சடலமாக மீட்கப்பட்டது காலை ஒஸ்மானியா கல்லூரி மைதானத்தில் என ஒரு தரப்பும் மற்றுமொரு தரப்பு யாழ் சிறைச்சாலைக்கு அண்மையில் உள்ள முற்றவெளி ஆள் நடமாட்டமற்ற பகுதியில் என மற்றுமொரு தரப்பு தெரிவிக்கின்றது.
இது தவிர குறித்த இளைஞன் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் கஞ்சா,ஹெரோயின் தொடர்பான குழுக்களுடன் சகவாசம் கொண்டிருந்ததாக அங்குள்ள மக்கள் உட்பட அரச பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் கடந்த மாதங்களாக குறித்த இளைஞன் சகல சட்டவிரோத செயல்களையும் கைவிட்டு மார்க்கம் தொடர்பிலான செயலில் ஈடுபட்டு வந்ததாக மற்றுமொரு தகவலும் வெளியாகி உள்ளது.
இது இவ்வாறு இருக்க பொலிஸ் தரப்பில் உள்ள அதிகாரிகள் இறந்த இளைஞன் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்பு பட்டவர் என கூறி வருகின்றனர்.
எனினும் குறித்த இளைஞனது பெற்றோர்கள் தனது பிள்ளை எவ்வித பிரச்சினைகளுக்கும் செல்லாதவர் எனவும் அவரை யாரோ திட்டமிட்டு கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தற்போது குறித்த இளைஞனது மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் என்ன காரணம் என்பது தெரிய வரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
