மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவையடுத்து பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் சுகாதார நெருக்கடிகள் ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரட்ன சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். குறித்த பிரதேசத்தில் டெங்கு, இன்புளுவன்சா நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவையடுத்து சுகாதார அமைச்சு மேற்கொண்டு வரும் நகர்வுகள் தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு சற்றும் எதிர்பாராது நடந்த ஒன்றாகும்.
ஆரம்பத்தில் இருந்தே நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உரிய அமைச்சின் ஊடாக இந்த குப்பை மேட்டை அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும் துரதிஷ்டவசமாக இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கம் என்ற அடிப்படையில் இந்த பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேபோல் இந்த சம்பவத்தை அடுத்து குறித்த பகுதிகளில் மோசமான நோய்கள் பரவக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஆகவே மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவையடுத்து பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் சுகாதார நெருக்கடிகள் ஏற்படுதைத் தடுக்க தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளோம்.
குறித்த பிரதேசத்தில் டெங்கு, இன்புளுவென்சா நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தப் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்றும் நடவடிகைகளை உடனடியாக மேற்கொள்ள சுகாதார பணிப்பகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
