பண்டாரவளை கலமடுகஸ்தன்ன பகுதியில் காணப்படுகின்ற குப்பை மேடு சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் குப்பை மேட்டை அண்மித்து வாழும் 12 குடும்பங்களையும் உடனடியாக பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை பிரதேசசபைக்கு உட்பட்ட 15 பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளும் கலமடுகஸ்தன்ன குப்பை மேட்டிலேயே கொட்டப்படுகின்றன.
நீண்ட காலமாக இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில் குப்பை மேட்டை சுற்றி 30 அடி உயரமான சீமெந்து சுவர் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது.
எனினும் தற்போது கலமடுகஸ்தன்ன குப்பை மேட்டின் கனம் அதிகரித்துள்ள நிலையில் குப்பை மேட்டை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுவரில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து குப்பை மேட்டை அண்மித்து வாழும் 12 குடும்பங்களையும் உடனடியாக உரிய பகுதியை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த மாதம் 14ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 32 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
