நீண்ட காலமாக கீரியும் பாம்பும் போல் பிரிந்து செயற்பட்ட கிழக்கின் அரசியல் தலைமைகளை ஒன்றிணைய வைத்தது மாயக்கல்லி மலை விவகாரம். இச்சம்பவம் நேற்று மாலை (ஞாயிறு) 4.00 மணியளவில் இறக்காமம் மௌலானா மண்டபத்தில் அம்பாறை மாவட்டத்தின் புத்திஜீவிகள் உலமாக்கள் சட்டத்தரணிகள் முன்னிலையில் இடம்பெற்றது.
கிழக்கின் அரசியல் தலைமைகளை ஒன்றிணைத்து அம்பாறை மாவட்டத்தின் சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் மாயக்கல்லி மலைப் பிரதேசம் உட்பட புதைபொருள் என்ற போர்வையில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் காணி ஆக்கிரமிப்பு தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு கிழக்கு புத்திஜீவிகள் அவையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்மட்ட கூட்டத்திலேயே கிழக்கின் அரசியல் தலைமைகள் ஒன்று கூடியதையும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியதையும் காணக்கூடியதாக இருந்தது.
கிழக்கு புத்திஜீவிகள் அவையத்தின் தலைமைத்துவக் குழு தவிசாளர் சட்டத்தரணி மர்சூக் மௌலானா இறக்காமம் பிரதேச இணைப்புக்குழுத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர் ஆகியோரின் நெறிப்படுத்தலின் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் மாயக்கல்லி விவகார குழு செயலாளர் சட்டத்தரணி பாறுக் சாஹிப் சபையோருக்கு மாயக்கல்லி விடயம் தொடர்பில் தெளிவாக விளக்கினார்.
மாவட்டத்தின் காணி அபகரிப்பு தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை முன்மொழிந்ததுடன் முன்னாள் அமைச்சர்களான பசீர் சேகுதாவுது, ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயளலார் எம்.ரி.ஹஸன் அலி, பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமில், சட்டத்தரணி துல்கர் நயீம், கனிய வளங்கள் கூட்டுத்தாபன தலைவர் எம்.ஏ.மஜீத் (எஸ்.எஸ்.பீ), அட்டாளைச்சேனை தவிசாளர் எம்.எஸ்.ஹன்சில் மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மாயக்கல்லி மலை தொடர்பாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் பேசுகையில் மாயக்கல்லி விடயத்திலும் தலைமைகள் மேற்கொள்ளும் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் பிரிந்து செயற்படுவதும் வேதனை தருவதாகத் தெரிவித்து ஒலிவாங்கியைப் பிடித்து கண்ணீர் மல்க கதறி அழுததையும் அனைவர் உள்ளங்களையும் நெகிழ வைத்தது. அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுது எம்.டி.ஹசன் அலி, பிரதி அமைச்சர் அமீர் அலி மாகாண எதிர்ககட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரும் உரை நிகழ்ததினர்.
(இறக்காமம் விஷேட நிருபர் - எஸ்.எம். சன்சீர்)
