அமைச்சர் பைஸர் முஸ்தபா வீடு முற்றுகை?



உள்ளுராட்சி சபை தேர்தலை விரைவில் நடத்தாவிட்டால் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் வீட்டை முற்றுகையிட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் மாகாணசபை உறுப்பினர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள், கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களை பார்த்து அரசாங்கம் அச்சம் அடைந்துள்ளது.
அதன் காரணமாகவே தேர்தலை நடத்த அரசாங்கம் தயக்கம் காட்டி வருகின்றது. தேவையான நேரத்தில் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்.
எனவே, விரைவில் உள்ளுராட்சி சபை தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாது போனால் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் வீட்டை முற்றுகையிட உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.