துருக்கி
அதிபர் டாக்டர் ரஜப் தய்யிப் அர்துகான் அதிகாரப்பூர்வ பயணமாக கடந்த 30 ஆம்
தேதி இந்தியா வந்தார். இரண்டு நாட்கள் இந்தியாவில் இருந்த அவருக்கு இந்திய
அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே
அதிபர் அர்துகானுக்கு டில்லி ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலையின் சார்பில்
சர்வதேச சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை நிலைநாட்டுவதில் அவரின்
பங்களிப்பைப் பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்டு டாக்டர் அர்துகான் பேசியதாவது,
“துருக்கி
– இந்தியா உறவில் ஜாமிஆ மில்லியாவின் பங்களிப்பை எளிதில் யாரும்
புறக்கணிக்க இயலாது. துருக்கி உதுமானியப் பேரரசின் காலத்தில் 1912- 1913
வரை நடந்த பால்கன் போரில் காயமடைந்த துருக்கி வீரர்களுக்கு டாக்டர் எம்.ஏ
அன்சாரி தலைமையிலான இந்திய மருத்துவர்கள் சிகிச்சையளித்ததை நாங்கள்
மறக்கவில்லை.
அதுமட்டுமல்ல..
இந்திய சுதந்திரப் போரட்டத்தில் ஜாமிஆவின் பங்களிப்பை பாரட்டிய எர்துகான்,
அதே சமகாலத்தில் துருக்கி உதுமானிய கிலாஃபத் வீழ்த்தப்பட்டதை எதிர்த்து
இந்தியாவில் நடந்த கிலாஃபத் இயக்கத்திலும் ஜாமிஆவின் மில்லியா நிறைவான
பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.
துருக்கியின்
கலாச்சாரமும் இந்தியாவின் கலாச்சாரமும் ஒன்றுபட்டிருப்பதைக் குறிப்பிட்ட
எர்துகான், கலாச்சாரம் மற்றும் கல்வியில் நாம் இருநாடுகளும் ஒன்றுபட்டு
அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்றார்.
சுமார்
1.3 பில்லியன் மக்கள் வாழக்கூடிய இந்தியாவுக்கு ஐநா பாதுகாப்பு
கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைப்பதை துருக்கி வலிமையாக ஆதரிக்கின்றது.
தற்போதைய
ஐநா பாதுகாப்பு சபை இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் அமைக்கப்பட்டது.
தற்போது நிலைமை மாறியிருக்கின்றது. உலக நாடுகளின் தலைவிதியை வெறும் ஐந்து
நாடுகள் தீர்மானிப்பதை ஏற்க முடியாது.
தீவிரவாதத்தை எவ்விதத்திலும் ஏற்க இயலாது. குறிப்பிட்ட மதத்துடன் அதனை தொடர்புபடுத்துவது நியாயமற்ற செயல்.
அல்காயிதாவோ, ஐஎஸ்ஐஎஸ் எதுவாகினும் இஸ்லாத்துடன் அதற்கு தொடர்பில்லை. அவ்வாறு தொடர்புபடுத்துவது இறைமறுப்புக் காரியமாகும்.
சிரியா
அகதிகளுக்காக எங்களின் கதவுகளையும், இதயங்களையும் திறந்து
வைத்திருக்கின்றோம். சிரியா மட்டுமல்ல. எல்லா அண்டை நாட்டு அகதிகளையும்
ஏற்று வாழ்வளிக்கின்றோம். மனசாட்சிக்கு மதிப்பளித்துத் தான் அந்த
மக்களுக்கு நாங்கள் உதவி செய்து வருகிறோம்.
சர்வதேச
சமூகமும் சிரியா அகதிகளுக்கு மனசாட்சியின் அடிப்படையில் மனிதாபிமான உதவி
செய்யவும், இடம் தரவும் முன்வர வேண்டும். அவர்களின் கஷ்டங்களை அலட்சியமாக
கருதும் கொடுங்கோலர்களாக நாம் ஆகிவிடக்கூடாது என்றார்.
இந்தியாவின்
பிரதமர் மோடியுடனான சந்திப்பை பயனுள்ளதாக இருந்ததாக குறிப்பிட்ட
அர்துகான், இந்தியாவுடனான வர்த்தகமும், வர்த்தக உறவும் இச்சந்திப்பின்
மூலம் மேம்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
விழாவில்
பேசிய ஜாமிஆ மில்லியா துணை வேந்தர் புவியியல் விஞ்ஞானி பேராசிரியர்
அஹ்மது, நிலநடுக்க ஆராய்ச்சியில் துருக்கி பல்கலைகழங்கள் ஜாமிஆ
மில்லியாவுக்கு ஒத்துழைப்பு அளித்திட அர்துகான் விரைந்து ஆவண செய்ய
வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
