இன, மத முரண்பாடுகளைத் தூண்டும் விதமாக அண்மைய நாட்களில் பதிவான அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் பொதுபல சேனா அமைப்பு இருப்பது இதுவரை செய்யப்பட்டுள்ள விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாகவும், அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர், பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
அத்துடன் இதுவரை சந்தேக நபர்கள் கைது செய்யப்படாத வெல்லம்பிட்டிய பள்ளிவாசல் மீதான தாக்குதல், எல்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தக நிலையம் மீதான தீ வைப்பு, வென்னப்புவையில் முஸ்லிம் வர்த்தக நிலையம் மீதான தீ வைப்பு தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்ய அந்தந்த பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ் சிறப்புக் குழுக்கள் விசாரணைகளைத் தொடர்வதாகவும் மிக விரைவில் அவர்களைக் கைது செய்ய முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
' நுகேகொடை பகுதியில் நான்கு முஸ்லிம் கடைகள் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினரை நாம் கைது செய்தபோது, பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.
அந்த சந்தேக நபர் தமது அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை எனவும் அவர் பொது பல சேனா என நிரூபிக்குமாறு பொலிஸாருக்கு சவால் விடுத்தார். அத்துடன் குறித்த நடவடிக்கைகள் தொடர்பிலும் நிரூபிக்குமாறும் சவால் விடுத்தார்.
நான் அவரது பாணியில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அதற்கு பதிலளிக்கவில்லை. மாற்றமாக செயலில் காட்டினோம். குருநாகல் மல்லவபிட்டிய ஜும் ஆ பள்ளிவாசல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைதானவர்கள் யார்? யார் என்ன சொன்னாலும் கைதானவர்கள் யாரென்றும் அவர்கள் யாருக்காக வேலை பார்த்தார்கள்? அவர்களது நிகழ்ச்சி நிரல் என்ன என்பதும் குருநாகல் மக்களுக்கு நன்கு தெரியும்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் படி, நாட்டில் அண்மையில் பதிவான அனைத்து இன, மத முரண்பாட்டு குற்றங்களின் பின்னணியிலும் பொது பல சேனா இருப்பது உறுதியாகியுள்ளது.
கைதாகியுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிராக இனவாதம், மதவாதத்தைத் தூண்டுவோருக்கு எதிராக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் உறுப்புரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைவிட தண்டனைச் சட்டக் கோவையின் 291 (1) ஆம் பிரிவின் கீழும் குற்றம் சாட்டப்பட்டே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

0 கருத்துகள்