( எஸ்.அஷ்ரப்கான் )
மஹிந்த ராஜபக்ஷ பொதுபலசேனாவுக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்காமல் இருந்த வேளையில் அவர்கள் விடயத்தில் மௌனமாக இருந்த போது அவரை பகிரங்கமாக கண்டித்த முஸ்லிம்கள் ஐ தே க அரசின் அமைச்சர்களான விஜேதாசவும், சம்பிக்கவும் வெளிப்படையாகவே பொது பலசேனாவை ஆதரித்து பேசுவது மட்டுமன்றி பகிரங்கமாக உதவி செய்யும் போது முஸ்லிம் பொது மக்களும் அரசியல்வாதிகளும் மௌனமாக இருக்கிறார்கள் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லிம் சமூகத்துக்கெதிரான இனவாதம் என்பது மஹிந்தவை வீழ்த்துவதற்காகவும் நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், மோதல்களை உருவாக்கி அதில் குளிர் காய வேண்டும் என்பதற்காகவும் வெளிநாடுகளின் பின்னணியில் உருவாக்கப்பட்ட சதித்திட்டமாகும். இதனை முன்னெடுத்தவர் சம்பிக்க ரணவக்க என்பவரே.
முஸ்லிம்கள் பற்றி பொய்யான செய்திகளை பரப்பி சிங்கள மக்கள் முஸ்லிம்களை வெறுத்து அவர்கள் மத்தியில் முஸ்லிம்களை பற்றி தேவையற்ற அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தியவர் இவராகும்.
முஸ்லிம் பகுதிகளில் கள்ளத்தனமாக இரவோடிரவாக ஏதாவது தொல்பொருளை வைத்து விட்டு அந்தப்பகுதிகள் தொல் பொருள் ஆய்வுக்குரியவை என்ற பிரச்சாரத்தை இவரே முன்னெடுத்தார்.
இவரால் உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டவரே ஞானசார தேரர் என்பதை அண்மையில் சம்பிக்க பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்தார். அத்துடன் பொது பல சேனா சொல்வது சரியானது எனவும் கூறியிருந்தார். அவரது இக்கூற்றுக்கு பதில் தரக்கூட முடியாதவர்களாக நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். அதிலும் சிங்கள மொழியில் நன்கு உரையாற்றக்கூடிய ஹக்கீம், முஜிபுர்ரஹ்மான்,மரிக்கார், கபீர் ஹாஷிம் போன்றோர் பெட்டிப்பாம்பாய் அடங்கிப்போயுள்ளனர்.
இவர்கள்தான் மஹிந்த காலத்தில் அவர் பொது பல சேனாவுக்கு மௌனமாக ஆதரவு வழங்குகிறார் என பயில்வான் லேகியம் சாப்பிட்டவர்கள் போன்று எகிறிக்குதித்தார்கள். இப்போது சம்பிக்கவும், விஜேதாசவும் பகிரங்கமாகவும், ரணில் விக்ரமசிங்க மௌனமாகவும் பொது பல சேனாவுக்கு ஆதரவு வழங்கும் போது தூக்க மாத்திரை சாப்பிட்டவர் போன்று ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்.
சம்பிக்கவும், ஐ தே கவும் ஞானசாரவுக்கு ஆதரவளிக்க காரணம் அவர் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து அவர்களை தம் பக்கம் கொண்டு வரவும் இதன் மூலம் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வாக்குகளையும், மஹிந்த அணி மீது அச்சம் கொண்டுள்ள முஸ்லிம் வாக்குகள் எப்படியும் தமக்கே கிடைக்கும் என்பதால் அவற்றையும் பெற்று சம்பிக்க போன்ற யாராவது இனவாதியை ஜனாதிபதியாக்கும் எண்ணத்திலேயே காரியங்கள் கனகச்சிதமாக நடை பெறுகின்றன.
இந்த நேரத்திலும் பொது பல சேனாவை தாம் ஆதரிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் வெளிப்படையாக சொல்லாமல் இருப்பதன் மூலம் அவர் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்கின்றார் என்பதை இவர்கள் புரிந்து செயற்படுகின்றனர். எப்படித்தான் மஹிந்த பொது பல சேனாவுக்கு தான் ஆதரவில்லை என்று சொன்னால் கூட முஸ்லிம்கள் மஹிந்த அணிக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதை ஐ தே க ஏஜன்டான முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசு புரிந்து கொண்டுள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட போது கூட மஹிந்தவுக்கு வாக்களிக்காமல் முஸ்லிம் காங்கிரசின் முட்டாள்தனமான பேச்சை கேட்டு மஹிந்தவை 2010 தேர்தலில் எதிர்த்து வாக்களித்தவர்கள் என்பதை புரிந்து வைத்துள்ளார்கள்.
எம்மை பொறுத்தவரை இப்போது மஹிந்த பொதுபலசேனாவை பகிரங்கமாக ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் சம்பிக்க, விஜேதாச, ரணில் போன்றோருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி தமக்குரிய சிங்கள மக்களின் வாக்குகளையாவது தக்க வைக்க முடியும்.

0 கருத்துகள்