குட்டித் தேர்தல் தோல்விக்கு ஐ.தே க.வின் பலவீனமே காரணம் - அஸ்வான் சக்காப் மௌலானா



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)                          

நடந்து முடிந்த குட்டித் தேர்தலில்  ஐ.தே.கட்சியின் வீழ்ச்சிக்கு ஐ.தே.கட்சியே காரணமென  முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் கல்முனைத் தொகுதி இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிமுக்கு அனுப்பப்பட்ட மகஜரில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

 நல்லாட்சி அரசில் அங்கம் வகிக்கின்ற ஐ.தே.கட்சியின் அமைச்சர்களுடைய கோட்டையாக இருந்து வந்த முக்கிய பல இடங்கள் தோல்வியைத் தழுவியதற்கான காரணம் அவர்களுடைய பலவீனவே. ஆட்சியை கைப்பற்றி மூன்று வருடம் எட்டிய நிலையிலும் ஐ.தே.கட்சி சரியான பயணத்தை நோக்கி செல்லவில்லை. இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்ற தேர்தலின் போது பெற்ற வாக்குகளை விட சற்று  குறைந்தளவுதான் பெற்றிருக்கிறார். ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு இந்தத் தேர்தலில் ஐ.தே.கட்சி தோல்வியை தழுவும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

தோல்வியைத் தழுவியதற்கான காரணங்களாக, இவர்கள் சரியான பயணத்தை மேற்கொள்ளவில்லை. தகவல் அறியும் சட்டம் மற்றும் ஊடகத்தை முற்றாக திறந்துவிடப்பட்டமை, ஐ.தே.கட்சிக்காக அயராது உழைத்தவர்களை கவனத்தில் எடுக்காமை, தொழில் வாய்ப்புக்கள் சரியாக வழங்கப்படாமை, சென்ற ஆட்சியாளர்களினால் அரசியல் பழிவாங்கப்பட்ட ஐ.தே.கட்சிகாரர்களை  கவனத்தில் எடுக்காமை, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த பிரதேசங்களில் எதுவித அபிவிருத்தியும் செய்யாமை என்பது போன்ற பல காரணங்கள் தோல்விக்கு காரணம். எனவே இருக்கின்ற காலத்தின்போதாவது நாட்டை திடகாத்திரமான முறையில் கட்டி எழுப்ப முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.