வெலிகம நகரசபையின் ஆட்சியை பதினான்கு வருடங்களுக்குப் பின், ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது. மொத்த 11 வட்டாரங்களைக் கொண்ட வெலிகம நகர சபைத் தேர்தலில் 11 வட்டாரங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி தன்வயப்படுத்தியுள்ளது. 07 போனஸ் ஆசனங்களுடன் மொத்த 18 ஆசனங்களைக் கொண்ட வெலிகம நகர சபையில் முறையே 12 ஆசனங்களை ஐ.தே. கவும், ஐ.ம. கூட்டணி 03 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 03 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன (மகிந்த) கட்சிக முன்னாள் நகர சபைத் தலைவர் எச்.எச். முஹமட் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்தபோதும் , வேட்புமனு நிராகரிப்பால் அக்கட்சிக்குப் போட்டியிட வாய்ப்புக் கிட்டவில்லை.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் ஒருவரே எச்.எச். நகரபிதாவாக இருந்துவந்துள்ளார். இம்முறை நகர சபைத் தலைவராக ஒரு முஸ்லிம் வேட்பாளரே வரவேண்டும் என வெலிகம மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அந்தவகையில், ஐ.தே.க வின் புதியதெரு வட்டாரத்தில் போட்டியிட்டு, 1056 வாக்குகளுடன் வெற்றிபெற்ற மொஹமட் ஷியாம் (ஷியாம் மல்லி) அதற்கு மிகவும் பொருத்தமானவர் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
மொஹமட் ஷியாம், இம்முறை நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்களுடன் ஒப்பிடுகையில், ஐ.தே.கவுக்கு மிகவும் பழைமை வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 14 வருடங்களாக நகர சபையில் அங்கம் வகிப்பவர். 04 ஆண்டுகள் வெலிகம நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் தன்னாலான பங்களிப்பினை மக்களுக்கு பலவகையிலும் வழங்கியவர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
அவர் மக்களுடன் மக்களாகக் கலந்து வாழ்பவர்… மிகவும் எளிமையானவர்… கருமமே கண்ணாயிருப்பவர். எல்லோரும் அவரை அன்பாக ஷியாம் மல்லி என்றே அழைக்கின்றனர். இதுவே அவர் பற்றி மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாகவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் வெலிகம நகர சபையில் முஸ்லிம் ஒருவர் இதற்கு முன்னர் நகரபிதாவாக இருந்ததில்லை. இம்முறை நடைபெற்ற தேர்தல் வாக்களிப்பினை உற்றுநோக்கும்போது, தென் மாகாணத்திலேயே வெலிகமவில் மட்டுமே முஸ்லிம் ஒருவர் நகரபிதாவாவதற்காக வாய்ப்பு உள்ளது.
இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி வெலிகம நகர சபையில் பெற்ற வாக்குகளில் (6435) அரைவாசிக்கு மேற்பட்ட வாக்குகள் முஸ்லிம்களின் வாக்குகளாகும் எனக் குறிப்பிட முடியும்.
பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலேயே ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது என்பதை தேர்தல் முடிவுகளை நோக்கும்போது புலனகிறது. அதனடிப்படையில்,முஸ்லிம்களுக்கு ச் செய்யும் கைம்மாறாக வெலிகம நகர சபையின் – நகராதிபதியாக ஷியாம் மல்லி நியமிக்கப்பட வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
