அரசில் இருந்து விலகியவர்கள் பொதுஜன பெரமுனவில் இணைய கடும் எதிர்ப்பு!



அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைத்து கொள்ள வேண்டாம் எனவும், அவர்களுக்கு அமைப்பாளர் பதவிகளை வழங்க வேண்டாம் எனவும் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து பொதுஜன பெரமுன தரப்பு இரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரியவந்ததை அடுத்து, கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றின் தலைமைகளுக்கு இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சுசில் பிரேமஜயந்த, தயாசிறிய ஜயசேகர, ஜோன் செனவிரத்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, சந்திம வீரக்கொடி உள்ளிட்டோர், தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குமாறு கோரி பேச்சுவார்த்தை நடத்தியதாக பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவை பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட தலைவராக நியமிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த 16 பேரை இணைத்து கொண்டால், உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன என்பதை உறுதிப்படுத்தி, முக்கியமான அரசியல் இலாபத்தை பெற முடியும் என கோரிக்கை முன்வைத்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் குறித்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அறிந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிஸ்தர்கள், பசில் ராஜபக்சவை சந்தித்து தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த யாப்பா அபேவர்தன, டளஸ் அழகப்பெரும ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் மாத்தறை அமைப்பாளராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவை நியமிக்க வேண்டும் எனவும், கூறியுள்ளது.

அத்துடன் சந்திம வீரக்கொடிக்கு காலியில் தொகுதி அமைப்பாளர் பதவியை வழங்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன, பசில் ராஜபக்சவை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜோன் செனவிரத்ன, தயாசிறி ஜயசேகர, எஸ்.பி. திஸாநாயக்க உட்பட அரசாங்கத்தில் இருந்து விலகி வந்த 16 பேருக்கும் பொதுஜன பெரமுனவில் பதவிகள் எதனையும் வழங்கக் கூடாது என பசில் ராஜபக்சவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

இதனையடுத்து அவர்களுக்கு அமைப்பாளர் பதவிகளை வழங்க போவதில்லை எனவும் கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்