பாணந்துறை வாதுவை பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதியில் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு சுகவீனமுற்று நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் என் மீதும் சிலர் பொய்க்குற்றம் சுமத்துகிறார்கள். நான் போதைப் பொருட்களுக்கு எதிரானவன். எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸாரை வேண்டுபவன் என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடாக மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில் ‘சுற்றுலா விடுதியில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வுக்கு கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதியே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கெதிராக பல குற்றச்சாட்டுகள் இருந்தன. அதனால் அவரை இடமாற்றம் செய்தேன்
அப்போது பலர் குருமார்கள் உட்பட இடமாற்றத்தை ரத்துச்செய்யுமாறு கோரினார்கள். நான் மறுத்ததுடன் இதுதொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுமாறு தெரிவித்தேன்.
நான் எந்த அனுமதியைப்பெற்றுக்கொடுப்பதற்கும் பொலிஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதில்லை. பொலிஸ் நிலையத்தில் தான் செய்த முறைப்பாடு விசாரிக்கப்படவில்லை என்று எவராவது முறையிட்டால் நான் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரிப்பேன். அவர்கள் நியாயமான காரணங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வேன் என்றார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் நீங்கள் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளனவே? என்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கையில் ‘நான் நேர்மையான அரசியல் செய்பவன். பொய்க் குற்றச் சாட்டுகளுக்கு நான் பயப்படப்போவதில்லை. சுயநலவாத அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுக்களை நான் எதிர்க்கிறேன்.
களியாட்ட நிகழ்வொன்று நடந்தால் போதைப்பொருள் பாவிப்பவர்கள் அதைப்பாவிப்பார்கள். மதுபானம் அருந்துபவர்கள் அருந்துவார்கள். இதை இலங்கையில் இல்லாமற் செய்ய முடியுமா? இவ்வாறான களியாட்ட நிகழ்வுகள் இடம் பெறும்போது பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றார்.

0 கருத்துகள்