Headlines
Loading...
தாஜூடீன் கொலை விவகாரம் : முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நிபந்தனையுடன் பிணை

தாஜூடீன் கொலை விவகாரம் : முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நிபந்தனையுடன் பிணை



பிரபல ரக்பீ வீரர் வஸீம் தாஜுடீனின் கொலை வழக்கில் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரான அநுர சேனாநாயக்க மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதவான் விக்கும் களுவாராச்சி முன்னிலையில் இன்றைய தினம் இந்தக் குற்றப்பத்திரிகை சமர்பிக்கப்பட்டதோடு கடுமையான நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய எதிர்கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான கடந்த 2012ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுடீன் கொழும்பு நாரஹேன்பிட்டியில் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்ததாக அப்போது அறிவிக்கப்பட்டு விசாரணைகளும் நிறுத்தப்பட்டது. எனினும் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின்போது இது விபத்து அல்ல என்றும் இதுவொரு திட்டவமிடப்பட்ட கொலை எனவும் தெரியவந்தது.

இந்த நிலையில் கொலையை விபத்து என்று மாற்றியமைத்து சாட்சியங்களை மூடிமறைத்த குற்றச்சாட்டிற்காக முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். எனினும் சந்தேக நபரான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கான அனுமதியை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வழங்கியது. சந்தேக நபரின் கடவுச்சீட்டினை மன்றில் சமர்பிக்குமாறு அறிவித்த நீதவான், நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தாமல் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கும் இதன்போது நிபந்தனை விதித்தார்.

அதேபோல இந்த வழக்கின் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் பிரயோகித்தல் மற்றும் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் பிணை அனுமதியை இரத்து செய்வதாகவும் மேல் நீதிமன்றம் எச்சரித்தது. அதேவேளை சந்தேக நபரான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவின் கை ரேகை குறித்த அறிக்கையொன்றை சமர்பிக்கும்படி இரகசிய பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்த நீதவான், அன்றைய தினத்தில் நாரஹேன்பிட்டி குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா உள்ளிட்ட 06 சந்தேக நபர்களுக்கு மன்றில் முன்னிலையாகும் படியான நோட்டீஸ் அனுப்புமாறும் உத்தரவிட்டார்.

0 Comments: