நாட்டை நாசமாக்க விடமாட்டோம் அராசாங்கத்தை எச்சரிக்கும் ஞானசார தேரர்.


ஆர்.யசி


அரசாங்கம் தேர்தல் என்ற பேச்சை மூன்று மாத காலங்களுக்கு எடுக்காது, முதலில் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நாட்டை நாசமாக்கும் அரசியல் செயற்பாடுகளை எம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்கிறது பொதுபல சேனா பெளத்த அமைப்பு. அரசியல் தீர்மானத்துக்கு அப்பால் சுகாதாரத் துறையின் ஆலோசனைகளை கேளுங்கள் எனவும் கூறுகின்றனர்.

பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு இன்று (20) கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இது குறித்து மேலும் கூறுகையில்,

நாட்டில் மிகவும் மோசமான சூழல் காணப்படும் நிலையில் அரசாங்கம் எக்காரணம் கொண்டும் பொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்பதே அரசாங்கத்துக்கு நாம் கூறும் அறிவுரையாகும். அரசாங்கத்துக்கு தேர்தலை நடத்த நோக்கம் இருந்தாலும் தேர்தலில் வாக்களிக்க மக்கள் தயாரில்லை.


ஆகவே, மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு தேர்தலை பிற்போட வேண்டியதே அரசாங்கம் இப்போது கையாள வேண்டியதாகும். நாம் இதுவரை காலமாக கூறிய, முன்வைத்த, முன்னெடுத்த கொள்கையே இன்று இந்த அரசாங்கம் பின்பற்றி வருகிறது. ஆனால் இருக்க வேண்டிய இடத்தில் நாம் இல்லை. எனினும் மக்களின் பக்கம் நாம் எப்போதும் சிந்திக்கின்ற நபர்கள் என்ற வகையில் தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். மக்கள் இன்று நாடாளுமன்றத்தையோ, அமைச்சர்களையோ எதிர்பார்க்கவில்லை.


நாட்டில் கொரோனா வைரஸ் பரவலையடுத்து ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் மற்றும் வைத்தியர்கள் மிகச் சரியாக செயற்பட்டு வருகின்றனர். எனினும் ஜனநாயகத்தை நாசமாக்கி இராணுவ ஆட்சியை கொண்டுவாருங்கள் என நாம் கூறவில்லை.

சர்வாதிகாரிகளை உருவாக்குவதல்ல எமது நோக்கம். ஆனால் இன்று நாம் எதிர்நோக்கும் சூழலை கையாள வேண்டிய தேவை உள்ளது. மக்களை எவ்வாறு பசி பட்டினியில் இருந்து மீட்டெடுப்பது, நாட்டை எவ்வாறு பாதுகாப்பது என்பதே அவசியமாகும். இதில் ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டம் சிறந்ததாக கருதுகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்