இஸ்லாத்தில் பயங்கரவாதம் இல்லை; உயிர்த்த ஞாயிறு தாக்குதல்லை வன்மையாகக் கண்டிக்கிறேன் - பைஸர் முஸ்தபா காட்டம்




( மினுவாங்கொடை நிருபர் )


ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை யார் நடாத்தியிருந்தாலும் இது மனிதாபிமானமற்ற கண்டிக்கத்தக்க செயலாகும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஓராண்டு நிறைவு குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தாக்குதல்கள் இலங்கை வரலாற்றில் கறுப்பு எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதுடன், இது மிகக் கீழ்த்தரமான செயல் என்றும், இது போன்ற தாக்குதல்கள் இனிமேல் நடக்காமல் இருக்க அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அந்த அறிக்கையில் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம்கள் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடிய கயவர்களினாலேயே இக்கொடூர ஈனச்செயல் மேற்கொள்ளப்பட்டது என்பதே உண்மை. இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இஸ்லாத்தில் பயங்கரவாதம் இல்லை. பயங்கரவாத செயல்களைப் புரியுமாறு இஸ்லாம் ஒருபோதும் எவருக்கும் அனுமதியளிக்கவுமில்லை. பயங்கரவாதம் மேற்கொள்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நிலையில், ஸஹ்ரான் போன்ற ஒரு சிறு குழுவினரே இவ் ஈனச் செயலைச் செய்துள்ளனர். கண்மூடித்தனமாக நடாத்தப்பட்ட இவ்வாறான கொடுங் கைங்கரியத்தை எந்தவொரு இனத்தவராலேயோ அல்லது மதத்தவராலேயோ நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற வெறுக்கத்தக்க சம்பவங்கள், இனிமேலும் நிகழக்கூடாது என்பதுடன், இதன்பிறகும் எவருக்கும் எம்மதத்தினருக்கும் எங்குமே நிகழக்கூடாது என்பதே எனது வேண்டுதலாகும். பயங்கரவாதத்தை இஸ்லாம் வன்மையாகக் கண்டிப்பதனால்தான், இவ்வாறான கொடூரமானவர்களின் உடல் பாகங்களை எமது மையவாடிகளில் கூட அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது, "முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு முற்றிலும் எதிரானவர்கள்" என்பதற்கு சிறந்த சான்றாகும். இதேவேளை, இத்தருணத்தில் 2019 ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களின் போது கிறிஸ்தவ மக்களை நிதானப்படுத்தி, அவர்களுக்கு அழகிய பல வழிகாட்டல்களை வழங்கி, அச்சமூகத்தை நெறிப்படுத்திய கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் கர்தினால் மெல்கம் ரன்ஜித் அவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.
அக்கோரச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கிளர்ந்தெழாமல், அவர் வன்செயல்காரர்களிடமிருந்து முஸ்லிம்களை உரிமையுடன் பாதுகாத்தார். "முஸ்லிம்கள்" என்ற போர்வையில் சில அயோக்கியர்களினால்தான் இக்கோரச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இலங்கை முஸ்லிம்கள் இவ்வாறு ஒருபோதும் செயற்படமாட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தி, மெல்கம் ரன்ஜித் அவர்கள் கிறிஸ்தவ மக்களைச் சமாதானப்படுத்தினார்.
கர்தினால் மெல்கம் ரன்ஜித் அவர்களின் மகத்தான இச்செயற்பாடுகள், இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல, முழு உலக வாழ் முஸ்லிம்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. 
இவ்வேளையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்காகவும் பிரார்த்திப்பதுடன், இதனால் காயப்பட்டவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.


( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

0 கருத்துகள்