Top News

சாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..??


திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சுமார் 6 வருடங்களாக கடமையாற்றியவர்தான் சகோதரி ஹாலிஸா.



இவர் இலங்கையில் பிரபலமான அரபுக்கல்லூரியில் படித்து பட்டம்பெற்று வெளியேறிய ஒரு ஆலிமா ஆவார், மற்றும் இவர் ஒரு பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியுமாவார்.

இவரது கணவரும் இதே நிறுவனத்தில் சுமார் 20 வருடங்களாக கடமையாற்றிய நிலையில் 2015 ஆம் ஆண்டு புற்று நோயால் பீடிக்கப்பட்டு இறையடியெய்த, மூன்று பிள்ளைகளுடன் தனது குடும்பச்சுமையை பொறுப்பேற்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.

எனவே 2015 ஆம் ஆண்டுமுதல் இவரும் இதே நிறுவனத்தில் ஒரு நிரந்தர ஊழியராகப் பணிபுரியத் தொடங்கினார்.

இவர் எப்பொழுதும் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அணியக்கூடிய அபாயாவையே அணிந்து சென்றுள்ளார்.

கடந்த வருடம் நாட்டிலேற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட இனவாதத்தின் காரணமாக ஒருசில பேரினவாதிகள் ஒன்றுசேர்ந்து இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பெண் ஊழியர்களும் ஸாரி அணிந்துவரவேண்டும் எனும் திட்டத்தை வகுத்துள்ளனர். இவ்வாறு அணியாமல் வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும், அவர்களது சலுகைகளைக் குறைப்பதாகவும் மிரட்டியுள்ளனர். ஆனால் இவர் மார்க்கத்தை நன்றாக விளங்கிய ஒரு ஆலிமா என்பதால் உடலை வெளிக்காட்டக்கூடிய ஸாரியை அணியமுடியாதென மறுத்துவிட்டார்.

இதனால் இவர் பல அநீதிகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது, முதலில் இவரது மேலதிகநேர (over time) வேலை, சனி, ஞாயிறு தினங்களில் செய்யும் வேலைகளை நிறுத்தியுள்ளனர், பின்னர் இவரது ஒருமாத சம்பளத்தில் ஒரு சிறு தொகையை நீக்கியுள்ளனர், அதன்பின்னர் nopay போடுவோம் என்று மிரட்டியுள்ளனர், இவர் பல மானசீகமான பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்துள்ளார். இந்நிலையில் நாட்டில் கொரோனா பிரச்சினை ஏற்பட்டு அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம் செய்யப்பட்டன.

இவ்வாறாக அந்நிறுவனத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உள உடல்ரீதியான பல பாதிப்புகள் ஏற்படவே சுகயீன விடுமுறை எடுப்பதற்காக சென்ற சமயம் அங்கு HRM ஆக பணிபுரிந்துகொண்டிருந்த வசந்த என்பவர் ‘ஸாரி அணியாமல் உங்களால் உள்ளே வரமுடியாது, உங்களை உள்ளே வரவிட்டவர்களுக்கும் சேர்த்து சட்டநடவடிக்கை எடுப்பேன்’ என்று மிரட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து இவர் சுகயீன விடுமுறையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சென்ற மாதம் இவரது விடுமுறை சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக வருமாறு இந்நிறுவனத்திலிருந்து கடிதம் வரவே அவர் திரும்பவும் அபாயா அணிந்தே சென்றபோது அங்குள்ள காவலாளி ‘ஸாரி உடுத்திவராவிட்டால் உங்களை வெளியேற்றுமாறு அமைச்சிலிருந்து G.M. வீரதுங்கவுக்கு தொலைபேசிமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது ,எனவே உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது’ என்று கூறவே, இவர்’நான் இந்நிறுவனத்தில் 6 வருடங்களாக கடமையாற்றும் ஒரு நிரந்தர ஊழியர், தற்பொழுதுகூட எனது விடுமுறை சம்பந்தமாக கலந்துரையாட கடிதம் அனுப்பப்பட்டதால்தான் வந்துள்ளேன்’ என்று எவ்வளவோ எடுத்துரைத்தும், போராடியும் அவர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இப்போராட்டங்கள் நடைபெற்றது உண்மை என்பதை நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இவரிடம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல சுமைகள் தன்மீது பாரமாக இருக்கும் நிலைமையிலும்கூட இந்த இஸ்லாமிய ஆடை எமது சமூகத்தின் உரிமை இன்று இதனை நாம் விட்டுக்கொடுத்தால் படிப்படியாக எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டியேற்படும், எனவே இதனை எவ்வாறேனும் எமது சமூகத்துக்குப் பெற்றுக்கொடுத்தேயாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தனது தொழிலையே இராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளார்.

இதற்குமுன்னரும் பல தடவைகள் இந்த விடயமாக முஸ்லிம் சங்கம், யூனியன், புல்மோட்டை உலமாசபை போன்ற அமைப்புகளுக்கும் தனது கடிதங்களை அனுப்பியுள்ளார், இவர்கள் அனைவரும் இது விடயமாக இந்நிறுவனத்துடன் கலந்துரையாடியும் இனத்துவேசம் காரணமாக எதற்கும் அவர்கள் இணங்கவில்லை. இதனால் இதுவிடயமாக ஒருமுறை நீதியமைச்சர் அலிசப்ரி அவர்களிடம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வினவப்பட்டபோது அவர் பாதுகாப்புக்காரணங்களுக்காக முகத்தை மறைப்பதைத் தவிர வேறு எவ்வாறும் ஆடை அணியலாம் என்று குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க தான் ஒரு ஆலிமா என்பதை நிரூபிக்கத் தேவையான சான்றிதழ்களை வழங்கியும்கூட மதகுருமாருக்கான தமது ஆடைச்சுதந்திரத்தைக்கூட இவருக்குப் பெற்றுக்கொள்ள முடியவில்லை, மற்றும் இவர் ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரியாக இருந்தும்கூட சாதாரண ஒரு ஊழியராகவே நடாத்தப்பட்டார் என்பதும் கவலைக்குரிய ஒரு விடயமே.

இவர் இவ்வாறாக பல போராட்டங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்ததால் தற்பொழுது உள உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் எந்தவித வருமானமுமின்றி நிர்க்கதியான நிலையில் வீட்டிலிருக்கின்றார்.

இவரது இந்தப் போராட்டங்களுக்கான நல்ல பலன்கள் கிடைக்குமா? எமது சமூகத்துக்கான உரிமைகள் வென்றெடுக்கப்படுமா? பொறுப்புவாய்ந்தவர்கள் முன்வந்து இந்த சகோதரிக்காகவும் எமது சமூகத்துக்காகவும் குரல் கொடுப்பார்களா? இந்த சகோதரிக்கான நீதி கிடைக்குமா???

சிறந்த தீர்வுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளுடன்,

உம்மு ஸைனப்




Post a Comment

Previous Post Next Post