ஜனாதிபதி ரியாஜ் பதியூதீனை குற்றமற்றவரென அறிவித்தாரா ?




துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை.

இலங்கை அரசியலில் அ.இ.ம.கா தலைவரின் நாமம் பல வடிவங்களில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிலர் அவரை அரசியல் இலாபத்துக்காக பேரின மக்களிடத்தில், பேரின மக்களின் எதிரியாக சித்தரித்து வைத்துள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் அ.இ.ம.கா தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீனை கைது செய்து, பேரின மக்களின் வாக்குகள் குறி வைக்கப்பட்டிருந்தன. தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சகோ.றியாஜ் பதியூதீன் விடுவிக்கப்பட்டுள்ள இக் காலப்பகுதியானது மிக முக்கியமானது. அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்த்து 20வது அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதனை நிறைவேற்ற சிறுபான்மை கட்சிகளின் தேவையையும் அரசு உணர்ந்துள்ளது. சகோ.றியாஜ் பதியூதீனின் விடுவிப்பானது இக் காலப்பகுதியில் நடந்தேறியுள்ளதால், இது அரசியல் டீல் களில் ஒன்றாகவே இருக்குமா என்ற சந்தேகங்கள் மக்களிடையே எழுந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

சகோ.றியாஜ் பதியூதீன் அரசியல் டீலின் காரணமாகவே விடுக்கப்பட்டுள்ளார் என்ற சிந்தனை மக்களின் உள்ளத்தில் பதியப்படுமாக இருந்தால், அவர் தொடர்ந்தும் குற்றவாளியாகவே மக்களிடத்தில் நோக்கப்படுவார். இது அவருக்கும் நல்லதல்ல, அ.இ.ம.கா தலைவருக்கும் நல்லதல்ல. சகோ.றியாஜ் பதியூதீனின் விடுவிப்பை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளின் போது, தனக்கும் அ.இ.ம.கா தலைவருக்கும் இடையில் எந்தவித அரசியல் தொடர்பு / டீல் இல்லை என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸ கூறியிருந்தார். 


இது மிக முக்கியமானதொரு விடயம். இது முற்றிலும் அ.இ.ம.காவின் தலைவருக்கு சார்பான கருத்து. இதனை சிலர் அ.இ.ம.கா தலைவருக்கு எதிரான கருத்து போன்று நோக்குவது அவர்களின் அறிவு குறைபாடு. இதனை வைத்து பல விடயங்களை கோடிட்டு காட்ட முடியும். அதில் மிக முக்கியமான ஒன்று தான், சகோ.றியாஜ் பதியூதீனின் விடுவிப்பில் அரசியல் அழுத்தங்கள் / தேவைகள் இல்லையென்பதாகும்.

இதனை அவர் பகிரங்கமாக மக்கள் மன்றத்திலேயே சொல்லியுள்ளதால், இதன் பிறகு சகோ.றியாஜ் பதியூதீன் விடயத்தில் யாருமே தலையிட முடியாது. அவர் மீண்டும் பிரச்சினைக்கு உட்படுத்தப்படுவாராக இருந்தால், ஜனாதிபதி பொய்யுரைத்திருக்க வேண்டும் அல்லது பாதுகாப்பு துறைக்கு அழுத்தம் வழங்கி தவறான பாதைக்கு வழிகாட்டப்பட்டிருக்க வேண்டும். இவ்விரு அணியினரும் நம்பகத் தன்மையை இழப்பது பாரிய சிக்கலை தோற்றுவிக்கும்.

சகோ.றியாஜ் பதியூதீனின் விடுவிப்பை தொடர்ந்து ஏற்பட்ட சல சலப்புக்களின் போது மரியாதைக்குரிய கார்டினல் மெல்கம் ரஞ்சித் ரிஷாத்தின் சகோதரர் விடுவிக்கப்பட்டதன் பின்னணி அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமா என சந்தேகம் வெளியிட்டிருந்தனர். இவரின் இக் கருத்து மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றிருந்தது. இவ்வாறான நிலையில் தான், சகோ.றியாஜ் பதியூதீனின் விடுவிப்பில் அரசியல் டீல் இல்லையென ஜனாதிபதி கூறியுள்ளதோடு, அவரது கருத்துக்கு வலுச் சேர்க்கும் விதமாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ பாராளுமன்றத்திலேயே சகோ.றியாஜ் பதியூதீனுக்கு தீவிரவாதக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளார். இவற்றுக்கு அப்பால் பாதுகாப்பு துறை சார்ந்த பலரும் இக் கருத்துக்கு வலுச் சேர்க்கும் விதத்தில் பேசியுள்ளனர். கார்டினல் மெல்கம் ரஞ்சிதின் சந்தேகமானது ஜனாதிபதி போன்றவர்களின் நேரடி பதிலினாலேயே மறைக்க முடியும்.

தற்போது மக்கள் மத்தியில் சகோ.றியாஜ் பதியூதீன் குற்றமற்றவரென, அவரை குற்றவாளியாக்கியவர்களே கூறும் நிலை தோன்றியுள்ளது. மக்களும் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் இனியும் சிந்திக்காமல் இருக்க முடியாதல்லவா? இந் நேரத்தில் தங்களுக்கும், அ.இ.ம.கா தலைவர் றிஷாத் பதியுதீனுக்கு இடையில் எதுவித சம்பந்தமில்லை என்ற ஜனாதிபதியின் அறிக்கை சகோ.றியாஜ் பதியூதீனுக்கு சாதகமானது. அதுவே அ.இ.ம.காவின் தலைவர் றிஷத் பதியுதீனுக்கு தேவையானது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்