மாலைதீவு அடக்கத்தின் பின்னாலுள்ள விடயங்கள்.

ADMIN
0


கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதானது இலங்கை முஸ்லிம்களை ஆழ்ந்த கவலையில் மூழ்கச் செய்துள்ளது. இந் நிலையில் பல்வேறு தீர்வுகள் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரை மாலைதீவு கொண்டு சென்று அடக்குவதும் அதிலொன்று. இதனை மாலைதீவு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இதனை நன்கு ஆராய்வதன் மூலம் பல்வேறு விடயங்களை அறிய கூடியதாக இருக்கும்.




ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டால், அது ஏனைய முஸ்லிம்களுக்கு கவலையாக இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. கொரோனாவால் உலகமே அஞ்சிக் கொண்டிருக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட எமது உடல்களை அடக்க மாலைதீவு அரசு ஏற்றுக்கொண்டிருப்பது முஸ்லிம் என்ற சகோதரத்துவ பிணைப்பினால் என்றால் மிகையாகாது. அச் சகோதர பிணைப்புக்காக எதனையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதுவே எமது மார்க்கத்தின் விசேடமும் கூட. அல் ஹம்துலில்லாஹ்.




கொரோனாவால் மரணித்த இலங்கை முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கும் விடயமானது, எம்மை இலங்கையர்கள் அல்ல என கூறுவதற்கு ஈடானது என்பது மறுப்பதற்கில்லை. இதன் காரணமாக மாலைதீவு தீர்வை புறக்கணிப்பது அவ்வளவு உசிதமானதல்ல. நாம் இலங்கையரா அல்லது இஸ்லாமியரா எனும் வினா எழுகின்ற போது இஸ்லாத்துக்கே முன்னுரிமை வழங்கியாக வேண்டும். இதனை எந்த முஸ்லிமும் மறுக்க மாட்டார்கள் என நம்புகிறேன். மாலைதீவில் அடக்குவதற்கான அனுமதியைப் பெற்றாலும், அதனை தற்காலிக தீர்வாக வைத்துக்கொண்டு, இலங்கையில் அடக்கம் செய்யப்படுவதற்கான எங்களது உரிமையை பெற, கோர எம்மால் முடியுமான முயற்சிகளை செய்யலாம் அல்லவா? மாலைதீவில் அடக்குவதை தற்காலிக தீர்வாக பெறுவதில் தவறேதுமில்லை. முதலில் எவ் வழியிலாவது எரிப்பை நிறுத்துவோம்.




அடக்கம் பற்றிய ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல " ஜனாதிபதி மாலைதீவு அரசிடம் விடுத்த கோரிக்கை பற்றி அமைச்சரவைக்கு தெரியாது " என பதிலளித்துள்ளார். இந்த பதிலை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அமைச்சரவையில் அலசப்படும் விடயங்களை தான் பொதுவாக பேசுவார்கள் என்றாலும், அதற்கு அப்பால் அரசை நியாயப்படுத்தும் விடயங்களையும் கலந்துரையாடுவார்கள். இவ் விடயத்தில் ஜனாதிபதியின் செயற்பாட்டை நியாயப்படுத்தவோ, மேலதிக தகவல்களை வெளிப்படுத்தவோ செய்யாமல் "தெரியாது" என முடித்துக்கொண்டுள்ளதானது, இது தொடர்பில் வெளிப்படுத்தப்படும் தகவல்களில் கூட இனவாதம் கிளர்ந்தெழும் என அஞ்சுகிறார்களா என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. இது என்ன வகையான இனவாத வடிவமைப்போ தெரியவில்லை. இதனை வைத்து நன்கு சிந்திக்கும் போது பிரச்சினை கொரோனாவால் அல்ல முஸ்லிம் என்பதாலேயே என்பதை எவ்வித சந்தேகமுமின்றி அறிய முடியும்.




இலங்கை ஜனாதிபதியே மாலைதீவு ஜனாதிபதியிடம் அடக்க இடம் கோரியுள்ளார். இவ் விடயமானது ஜனாதிபதி அடக்கம் செய்யும் விடயத்தில் ஒரு தீர்வை வழங்க ஆர்வமாக உள்ளதை அறியச் செய்கிறது. இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனவாத வேரின் ஆழம், அவரால் இதற்கு தீர்வு வழங்க முடியாமைக்கான காரணமாக யூகிக்க முடிகிறது. இலங்கையில் இனவாதம் ராஜபக்ஸ அணியினரின் கட்டுக்கு அப்பால் எப்போதே சென்றுவிட்டது என்பதை உணர்ந்துகொள்ள இது போதுமான சான்றாகும். இது மிக ஆபத்தான நிலையாகும். வெறி பிடித்த மிருகம் எமது கட்டுக்குள் இருந்தால் எமது எதிரியை மாத்திரமே கொல்லும். அது எம் கட்டை மீறிச் சென்றுவிட்டால் நண்பனையும் கொன்றுவிடுமல்லவா?




எமது முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இவ்வாறான தீர்வை எப்போதே முன் வைத்திருக்கலாம், முன் வைத்திருக்க வேண்டும். இது எதனையும் செய்யாமல், மாலைதீவு அரசானது அடக்க அனுமதியளித்ததும், எனக்கு உங்களது சபாநாயகரை தெரியும், அவரை தெரியும், இவரை தெரியும் என கூறி மாலைதீவு ஜனாதிபதிக்கு நன்றி கடிதம் எழுதி ஊடகங்களில் வெளிப்படுத்துவதில் என்ன இலாபம் விளைந்துவிடப் போகிறது. நன்றி கடிதத்தை விடுத்து, அந்த சபாநாயகர் உறவை பயன்படுத்தி எப்போதே இந்த காய் நகர்த்தலை செய்திருக்கலாமே!




இந்த செய்தி ஊடகங்களில் குதிரை வேகத்தில் ஓடித் திருந்த போது மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியொருவர், அங்கு அடக்குவதற்கு எதிரான கருத்தை ஊடகங்களில் முன் வைத்திருந்தார். மாலைதீவு அரசுக்கு நன்றி கடிதம் எழுத முடியுமாக இருந்தால், ஏன் முன்னாள் ஜனாதிபதியின் கருத்துக்கு ஒரு முஸ்லிம் சகோதரனாக பதில் வழங்க முடியாது. செய்ய வேண்டியது இதுவே! இதனை செய்த ஒரே ஒரு முஸ்லிம் அரசியல் வாதி மு.பா.உறுப்பினர் அலி ஷாஹிர் மௌலானா என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டியாக வேண்டும்.




உலகில் பல்வேறு நாடுகள், பல்வேறு நபர்கள் மனித உரிமை பற்றி பாடம் நடத்தினாலும் இது பற்றியெல்லாம் நீதி கேட்க, மாலைதீவு போன்று அடக்கத்தை ஏற்க யாருமில்லை என்பதுவே உண்மை. இலங்கையை விட நீர்வளமிக்கதும், சிறியதுமான ஒரு நாடே மாலைதீவாகும். அந்த நாட்டில் அடக்குவது எவ்வாறு சரியாத தீர்வாகும் என்பதை சிந்தித்து பாருங்கள். இலங்கையில் நீரோட்டத்தின் மூலம் கொரோனா பரவும் என அஞ்சுவது உண்மை என ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், மாலைதீவில் நீரோட்டத்தின் மூலம் பரவினால், அது கடலுக்கு சென்று சர்வதேசத்தையே பாதிக்குமல்லவா? இலங்கை அரசு கொரோனா தொற்றாளர்களை அடக்க மறுப்பதானது இனவாதத்தின் காரணமாக என்பதற்கு இவற்றை விட வேறு சான்றேதும் தேவையில்லை.




மாலைதீவில் இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுமாக இருந்தால், இலங்கையின் இனவாத வேரூண்டலின் இழி நிலை கண்டு முழு உலகமுமே காறி உமிழும். ஏற்கனவே தமிழர்களின் விடயத்தில் சர்வதேசத்தில் இன அழிப்பு குற்றச் சாட்டை சுமந்துள்ள இலங்கை இவ்வாறான இனவாத சேறுகளை மேலும் தன் மீது பூசிக்கொள்வது அவ்வளவு உகந்ததல்ல. இலங்கையில் சிறுபான்மையின மக்களின் உரிமை பறிக்கப்படுகிறது என்பதற்கு இது சர்வதேச அரங்கில் வலுவான சான்றாக அமையப் போகிறது. 




இலங்கை அரசு இலங்கை முஸ்லிம்களின் இறுதி கடமையான அடக்கும் விடயத்தில் இனவாத சிந்தனைகளை கை விட வேண்டும். மாலைதீவில் அடக்கும் தீர்வு கிடைக்குமாக இருந்தால், அதனை தற்காலிக தீர்வாக ஏற்று, இலங்கையில் அடக்கம் செய்வதற்கான உரிமையை பெற நாம் முயற்சிக்க வேண்டும்.




துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.



Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default