நிந்தவூர் Dr. பாரிஸ் அகமட் விசேட வைத்திய நிபுணர் பரீட்சையில் (MD) சித்தி

 


கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டப்பின் கற்கை நெறிகளுக்கான உயர் நிறுவனத்தினால் (Postgraduate Institute of Medicine) அண்மையில் நடாத்தப்பட்ட MD இறுதிப் பரீட்சை முடிவுகள் இன்று (11.02.2021) வெளியிடப்பட்டுள்ளன. இதில் நமது ஊரைச்சேர்ந்த Dr. பாரிஸ் அகமட் விளையாட்டுத்துறை விசேட மருத்துவத்துறையில் (Field of Sports Medicine) முதலாவதாக சித்தி பெற்று நமது ஊருக்கு புகழ் சேர்த்துள்ளார். இத்துறையின் உள்நாட்டு பயிற்சிகளை ஏற்கனவே பூர்த்தி செய்துள்ள நிலையில் மேலும் ஒரு வருட வெளிநாட்டு பயிற்சியின் (இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியா) முடிவில் இன்ஷா அல்லாஹ்  விசேட வைத்திய நிபுணராக கடமைகளை பொறுப்பேற்பார்.


இலங்கையில் விளையாட்டுத்துறை விசேட மருத்துவப் பிரிவு அண்மையில்தான் ஆரம்பிக்கப்பட்டதுடன் இத்துறையில் MD (Part I) மற்றும் MD (Part II) (இறுதி) ப் பரீட்சைக்கு தோற்றி சித்திபெற்ற முதலாவது தொகுதி வைத்தியர்களில் Dr. பாரிஸ் அகமட்  அவர்களும் ஒருவராவார்.


பாடசாலைக் காலங்களில் விளையாட்டுத்துறையில் கொண்டிருந்த அதீத ஈடுபாடும், களனிப் பல்கலைக்கழகத்தில் கற்கும்போது பல்கலைக்கழக உதைபந்தாட்ட குழுவிலும், மருத்துவபீட பேட்மிட்டன் மற்றும் கிரிக்கெட் குழுவிலும் முன்னணி வீரராக திகழ்ந்தது இம்மருத்துவத் துறையை தெரிவு செய்ய  இவருக்கு ஊட்டம் அளித்துள்ளது. இவர் பல்கலைக்கழக விருது விழாவில் உதைபந்தாட்டம், கிரிக்கெட் விளையாட்டுகளுக்காக இரு தங்கப்பதக்கங்கள் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


கல்வித் துறையில் நீண்டகாலம் ஈடுபாட்டுடன் பணிபுரிந்த ஆசிரியர்களான அல்ஹாஜ் S.M. சரீப், ஹாஜியானி ஜூனைதா சரீப் ஆகியோரின் புத்திரரான இவர் தற்போது கொழும்பு பொது வைத்தியசாலையில் கடமை புரிவதுடன் இலங்கை பொலிஸ் றகர் குழுவிற்கு விளையாட்டு மருத்துவ இணைப்பாளராகவும் சேவையாற்றி வருகிறார்.


டாக்டர் பாரிஸ் அகமட் இத்துறையில் மென்மேலும் புகழ்பெற்று அனைவருக்கும் சிறப்பாகப் பணிபுரிய மனமார வாழ்த்துகிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்