(எம்.எப்.ம்.பஸீர்)
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் ( சி.ஐ.டி.) கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக் காவ்லில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதிகோரி பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்னவின் கோரிக்கைக்கு அமைய பொலிஸ் திணைக்களத்தால், பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலும் நாளைய தினம் (27), பயங்கரவாத தடை சட்டத்தின் 9 (1) ஆம் அத்தியாயம் பிரகாரம் 90 நாள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கிடைக்கப்பெறும் என சிஐடியினர் எதிர்ப்பார்க்கின்ரனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவி, ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ரிஷாத்பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கடந்த சனியன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களில் ரிஷாத் பதியுதீன் தொடர்பில் குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவொன்றும் பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தின் ஒரு குழுவும் இரு விடயங்களை மையப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக இன்று (26) மாலையாகும்போது, சினமன் கிராண்ட் ஹோட்டல் குண்டுதாரயான இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலைக்கு, செப்பு விநியோகம் செய்த நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. இதனைவிட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவுக்கு எடுத்த தொலைபேசி அழைப்பு ஆகியவை தொடர்பிலேயே ஆரம்பக்கட்ட விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, ரிஷாத்தின் சகோதரர் ரியாஜிடம், அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தை மையப்படுத்தியதாகவே விசாரணைகள் இடம்பெறுவதாக அரிய முடிகிறது.
எவ்வாறாயினும் ஊடகங்களிடம் பேசிய பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட நேரடி மற்றும் அறிவியல் ரீதியிலான சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே சந்தேகத்தில் குறித்த இருவரையும் கைது செய்ததாக கூறினார்

0 கருத்துகள்