
முஸ்லிம் சட்ட சீர்திருத்தக் குழு (2021.06.21) முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பாக, அதனது அறிக்கையை நீதியமைச்சர் அலி சப்ரி அவர்களிடம் ஒப்படைத்து.
இக்குழுவிற்கு முஸ்லிம்களின் பல மார்க்க விவகாரங்கள் தொடர்பில் அவர்களின் ஆலோசனையை முன்வைக்கும்படி அமைச்சர் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதில் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம், வக்ஃப் சட்டம், அல் குர்ஆன் மற்றும் அரபு மத்ரஸாக்கள் தொடர்பான சட்டம், ஹஜ் தொடர்பான சட்டமூலம் ஒன்றை உருவாக்குவது பற்றிய முன்மொழிவுகள் போன்றன உள்ளடக்கப்பட்டிருந்தது.
இதில் பிரதானமானதாக முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் காணப்படுகின்றது. இதன் முன்மொழிவுகள் தொடர்பில் அமைச்சரவை (கெபினட்) அமைச்சர்கள் மூலம் சில தீர்மானங்கள் ஏலவே எடுக்கப்பட்டிருந்தது. இவ்வமைச்சர்களின் தீர்மானங்களாக, திருமணத்தின் குறைந்த வயதெல்லை 18 ஆக இருத்தல், திருமணத்தின் போது பெண்ணின் சம்மதம் மற்றும் கையொப்பம் அவசியம், பலதார திருமணம் ரத்து செய்யப்படல், காதி நீதிமன்றங்களிலன்றி பொதுவான ஒரு நீதிமன்றத்தில் சட்டங்களை செயற்படுத்தல் போன்றன அமைந்திருந்தன.
எனவே, முஸ்லிம் சட்ட சீர்திருத்த குழுவிற்கு அவ்விவகாரங்கள் தொடர்பில் எந்த கருத்தும் அல்லது முன்மொழிவும் வழங்குவதற்கான அவகாசம் வழங்கப்படவில்லை. ஆனாலும் இக்குழுவில் உள்ள உலமாக்களாகிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்-ஷைக் ஏ.பீ.எம். அஷ்ரப் மற்றும் அஷ்-ஷைக் முஈஸ் புகாரி ஆகியோர் இவை தொடர்பிலான, குறிப்பாக திருமண வயதெல்லை, பலதார திருமணம் மற்றும் காதி நீதிமன்றங்களை இரத்து செய்தல் பற்றிய தங்களின் கவலையையும் நிலைப்பாட்டையும் தெரிவித்ததோடு அதற்கான மாற்று தீர்வுகளை வழங்குமாறு வேண்டி தனிப்பட்ட முறையில் அமைச்சருக்கு ஒரு கடிதத்தையும் வழங்கியுள்ளனர்.
0 கருத்துகள்