அட்டாளைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை என முறைப்பாடு.


அட்டாளைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை

என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது 


அட்டாளைச்சேனை கடற்கரைப் பிரதேசத்திலிருந்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இயந்திரப் படகு ஒன்றில் கடற்றொழிலுக்காகச் சென்ற இரு மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காணாமல்போன இரு மீனவர்களும் அட்டாளைச்சேனை கப்பலடி கடற்பகுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீன்பிடித் தொழில் நிமித்தம் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர். இவ்வாறு வெள்ளிக்கிழமை மாலை கடலுக்குச் சென்றவர்கள் மறுநாள் சனிக்கிமை காலை இருப்பிடம் நோக்கி திரும்பியிருக்க வேண்டும்.


ஒரு இரவுப் பொழுதில் மட்டும் ஆழ்கடலில் தரித்து நின்று மீன்பிடித் தொழில் ஈடுபட்டு வருவதனை வழமையாக்கிக் கொண்ட இவர்கள், ஒரு நாளுக்குப் போதுமான எரிபொருள், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை கொண்டு சென்றுள்ளதாக இவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதனால் இவர்களின் படகு காற்றில் அள்ளுண்டு செல்லப்பட்டிருக்கக் கூடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களைத் தேடும் பணியில் கடற்றொழில் அமைச்சு உத்தியோகத்தர்கள், கடற்படையினர், மீனவர்கள் மற்றும் துறைசார்ந்தோர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஜவாஹிர் முகம்மட் றிஸ்வி என்பவருக்குச் சொந்தமான படகில் பயணித்துக் காணாமல்போன இருவரும் அட்டாளைச்சேனை மற்றும் மூதூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


அட்டாளைச்சேனை 7 ஆம் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட 32 வயதுடைய அப்துல் றசீட் றிஸ்வான் என்பவரும், வாழைச்சேனையினைப் பிறப்படமாகவும், மூதூர் பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 32 வயதுடைய அப்துல் காசிம் முனவ்வர் என்பவருமே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஏ.பி.எம் அஸ்ஹர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்