தூதுவரின் கருத்துக்களுக்கு பதிலளித்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கை அரசாங்கமும் குவைத் அரசாங்கமும் மிகவும் நட்புறவான உறவுகளை அனுபவித்து வருவதாகவும், தனது காலப்பகுதியில் வளைகுடா நாடுகளுடனான இலங்கையின் உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். கோவிட்-19 அவசர சுகாதாரத் துறைத் தேவைகளுக்காக குவைத் செஞ்சிலுவை அமைப்பு வழங்கிய நன்கொடைகளுக்காக குவைத் அமீருக்கான இலங்கை அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய பல்தரப்பட்ட மன்றங்களில் குவைத் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய மதிப்புமிக்க ஆதரவையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை எரிசக்தி, ஹோட்டல், சுற்றுலா மற்றும் நகர்ப்புற வீட்டுத் திட்டங்கள் போன்ற பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மை மூலம் மேலும் விரிவுபடுத்துவது குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் ஆகிய இருவரும் கலந்துரையாடினர்.
சுற்றுலா, சுகாதாரம் மற்றும் எரிசக்தித் துறைகள் போன்ற இருதரப்பு ஒத்துழைப்பின் புதிய பகுதிகள் இன்னும் ஆராயப்படாமல் உள்ளதாகவும், அவை இரு நாடுகளுக்கிடையே ஏற்கனவே இருக்கும் நல்லுறவு உறவுகளை வலுப்படுத்துவதில் பரஸ்பர நன்மை பயக்கும் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

0 கருத்துகள்