(இராஜதுரை ஹஷான்)
உரப் பிரச்சினை இன்று அரசியலாக்கப்பட்டு விட்டது. விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியினர் உள்ளார்கள். இவர்களுடன் தற்போது அரசாங்கத்தில் இருந்து கொண்டு சுதந்திரக் கட்சியினரும் ஒன்றிணந்துள்ளார்கள். விவசாயிகள் போராடுவது பயனற்றது. இரசாயன உரம் இறக்குமதி செய்ய முடியாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
சேதன பசளை உரத்தை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளப்பட்ட நெல் விளைச்சலில், ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 70 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும். இரசாயன உரம் இறக்கமதி தடை என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது எனவும் தெரிவித்தார்.
அநுராதபுரம் பிரதேசத்தில் விவசாயிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சேதன பசளை திட்டம் குறுகிய காலத்தில் வெற்றி பெறாது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இத்திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதே தவிர அரசாங்கம் தோல்வியடையவில்லை. நாட்டு மக்களின் உடலாரோக்கியத்தை கருத்திற் கொண்டே இரசாயன உரம் பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது.
சேதன பசளை உரம் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதற்காக 7500 ரூபாய் ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது. பெரும்போகத்திற்கு தேவையான மேலதிக சேதன பசளை உரம் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு கமநல சேவையாளர் திணைக்களங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் சேதன பசளை உரம் போதுமான அளவு விநியோகிக்கப்படும்.
விவசாயிகள் இரசாயன உரத்தை கோரி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். உலகில் இரண்டாவது மாபியாவாக கருதப்படும் உர இறக்குமதியாளர்களுடன் மோதுகிறோம். தேசிய பிரச்சினையாக கருத வேண்டிய உர விவகாரம் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டு விட்டது. இப்பிரச்சினையை எம்மால் சிறந்த முறையில் வெற்றி கொள்ள முடியும்.
இரசாயன உரத்தை ஒருபோதும் இறக்குமதி செய்ய முடியாது. ஆகவே விவசாயிகள் கிடைக்கும் சேதன பசளையை கொண்டு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நஷ்டம் ஏற்பட்டால் அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்கும். ஆகவே அரசாங்கம் அனைத்து வசதிகளையும் விவசாயிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இனி செய்வதற்கொன்றும் கிடையாது என்றார்.
0 கருத்துகள்