ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் : 01 வருடத்திற்கு வாசித் எம்பி!

NEWS
1 minute read
0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித் இன்று (28.06.2025) நியமிக்கப்பட்டார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமானி அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் பரிந்துரையில் இந்த நியமனம் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் (PC) அவர்களினால் நுவரெலியாவிலுள்ள சுற்றுலா விடுதியில் வைத்து  வழங்கப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பை இணைத்துக் கொண்டமைக்கு, அவரின் ஊரைச் சேர்ந்த வாசித் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக பொத்துவில் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்குள் கடுமையான பிளவு ஏற்படும் நிலையும் உருவாகியிருந்தது.


இதனை தவிர்க்கும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்பை பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராககுவதற்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ், வாசித்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுயளித்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே வாசித்துக்கு மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வாசித்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் ஒரு வருட காலத்துக்கு எனும் நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூரைச் சேர்ந்த எம்.எஸ். நளீம் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் அண்மையில் நடந்து முடிந்த ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது எம்.பி பதவியை ராஜநாமா செய்திருந்தார். தற்போது ஏறாவூர் சபையின் தவிசாளராக நளீம் தெரிவாகியுள்ளார்.

To Top