Headlines
Loading...
தமிழ் பேசும் கட்சிகளின் கடிதம் : சமூகத்திற்காக தலையை அடமானம் வைக்க துணிந்த மயில்..

தமிழ் பேசும் கட்சிகளின் கடிதம் : சமூகத்திற்காக தலையை அடமானம் வைக்க துணிந்த மயில்..தற்போது தமிழ் பேசும் கட்சிகள் சில இணைந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இந்த முயற்சியில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளான மு.கா மற்றும் அ.இ.ம.கா ஆகியனவும் உள்வாங்கப்பட்டிருந்தன. இக் கடிதத்தில் அ.இ.ம.கா கையொப்பமிடுவதில்லை என, அதன் உயர்பீடம் மிக தைரியமான தீர்மானத்தை எடுத்துள்ளது.
எச் சமூகமும் இன்னுமொரு சமூகத்தோடு அவசியமற்ற விடயம் ஒன்றில் முரண்பட வேண்டிய தேவையில்லை. இருந்தாலும், சில முரண்பாடுகள் தவிர்க்க முடியாததே! தவிர்க்க முடியாத முரண்பாடுகளில் ஒன்றாகவே இதனையும் நோக்க முடிகிறது. வடக்கையும், கிழக்கையும் இணைத்தல், சமஷ்டி தீர்வு போன்றன முஸ்லிம் சமூகத்தை நேரடியாக பாதிக்கும். இதனை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள கூடாது. இவ்விடயத்தில் எவ்வித சமரசமும் அவசியமற்றது. அ.இ.ம.காவின் கையொப்பமிடுவதற்கு எதிரான தீர்மானமானது இவற்றையே வலியுறுத்தி நிற்கின்றன. இதுவே முஸ்லிம் சமூகத்தின் தீர்மானமாகவும் உள்ளது.
அ.இ.ம.காவின் தலைவர் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் யாவரும் அறிந்ததே! அவரது முழு குடும்பமுமே அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டிருந்தது. அவர் மீதான இட்டுக்கட்டல்களினால் சிங்கள சமூகம் அவர் மீது சற்று கோபத்திலுள்ளமை யாவரும் அறிந்ததே. இதன் காரணமாக, இதன் பிறகாவது அவர் அனைவரையும் அரவணைத்து செல்லும் போக்கை கைக் கொள்வதே, அவரது சுயநலத்துக்கு பொருத்தமான வழிமுறையாக இருக்கும். அப்படி இருந்தும் இவ்விடயத்தில் தமிழ் அணியோடு இணையாது, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பக்கம் சாய்ந்துள்ளார். இதனால் இவர் மீது தமிழ் அணியின், சர்வதேசத்தின் கோபப் பார்வை திரும்பியிருக்கும். இதனை மக்களுக்காக முரண்பாடாகவே நோக்க வேண்டும். இதன் விளைவு அ.இ.ம.கா தலைவரை சில நேரம் பாதிக்கலாம். முரண்பாடு மக்களுக்கானது, பாதிப்போ அவருக்கானது என்பதே இங்கு நாம் கவனத்திற்கொள்ளத்தக்கது.
தற்போது அ.இ.ம.கா எடுத்துள்ள தீர்மானமானது சாதாரணமாக நோக்க கூடிய ஒன்றல்ல. இது மு.கா கையொப்பமிடுவதை நேரடியாக சவாலுக்குட்படுத்தும். அ.இ.ம.காவானது கையொப்பமிடாது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதால், நிச்சயம் மு.காவும் கையொப்பமிடாது. ஆரம்பத்தில் மு.காவின் தலைவருக்கே இக் குறித்த விடயத்தை ஒருங்கிணைக்கும் தலைமைப் பதவி தமிழ் கட்சிகளால் வழங்கப்பட்டிருந்தது. மு.கா தலைவர் விலகுவாராக இருந்தால், அது இன்னும் குறித்த முயற்சியை கடுமையாக பாதிக்கும். இது இன்னும் அ.இ.ம.கா மீதான தமிழ் சமூகத்தின் கோபப் பார்வையை அதிகரிக்க காரணமாக அமையும்.
அ.இ.ம.காவின் தலைவர் சிறையில் இருக்கும் போது, அவரை விடுவிக்கும் நோக்கில் பா.உறுப்பினர்களால் அரசுக்கு வரையப்பட்டிருந்த கடிதத்தில், அக் கட்சியை பிரதிநிதித்துவப்படத்தியிருந்த பா.உறுப்பினர்களே கையொப்பமிடாத நிலையில், தமிழ் பா.உறுப்பினர்கள் கையொப்பமிட்டுருந்தனர். இந்த அழகிய உறவை அவர் தொடர்ந்திருக்கலாம். அவர் இந்த அழகிய உறவில் சர்வதேசத்தை வளைத்திருக்கலாம். தனது சொந்த பிரச்சினைகளை வைத்து, ஒரு சமூக விடயத்தை அணுகும் ஒருவராக அ.இ.ம.கா தலைவரோ அல்லது அவரது கட்சியோ இல்லை என்பது நேரிய தலைமைத்துவ வழிகாட்டல்களில் ஒன்று. இது தானே எமக்கும், எமது சமூகத்திற்கும் தேவையான ஒன்று.
அ.இ.ம.காவுக்கு பெருமளவான தமிழ் வாக்குகள் கிடைப்பது யாவரும் அறிந்ததே! அ.இ.ம.காவின் இக் குறித்த தீர்மானமானது அ.இ.ம.காவின் தமிழ் வாக்குகளை பெரிதும் பாதிக்கும். வாக்குகளுக்காக எம் சமூகத்தை கூறி விற்கும் செயலை அ.இ.ம.கா செய்யவில்லை, செய்யப் போவதுமில்லை என்பதை இதனூடாக நிரூபித்துள்ளது. வாக்குகளுக்காக சமூகத்தை அடமானம் வைக்கும் அரசியலை செய்வது அனுமதிக்க இயலாத ஒன்று. இத் தலைமைத்துவம் தானே எமக்கு தேவை.
வில்பத்துவில் மக்களை குடியேற்றி, பேரின மக்களின் எதிர்ப்பை மக்களுக்காக சம்பாதித்துக்கொண்ட அ.இ.ம.காவானது, தற்போது இவ் விடயத்தில் எம் சமூகத்திற்காக தமிழ் மக்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க துணிந்துவிட்டது. எமக்காக, எமது நலனுக்காக, தன்னலம் பாராது செயற்படும் அ.இ.ம.காவினதும், அதன் தலைவரினதும் நேரிய செயற்பாடுகள் பாராட்டுக்குரியதே!
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.

0 Comments: