பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் இன்று (14) சுகயீன விடுமுறை போராட்டத்துக்குத் தயாராகியுள்ளதாகவும் எதிர்ப்புப் பேரணியொன்றும் இன்றையதினம் நடத்தப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 23 தபால் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று (13) மாலை 4 மணி முதல் இன்று நள்ளிரவு வரை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்தது.
நிர்வாகத்தின் சட்டவிரோதம் மற்றும் அதன் ஊழல், தன்னிச்சையான நடவடிக்கைகளினால் இலங்கை மின்சார சபை மேலும் பாதாளத்துக்கு செல்வதாக மின்சாரசபையின் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஊழியர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் தாம் முன்வைத்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதே நாளைய தொழிற்சங்க நடவடிக்கையின் நோக்கம் என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தபால் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தபால் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தபால் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், நேற்று (13) காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
0 கருத்துகள்