எவர் எத்தகைய யோசனைகளை முன்வைத்தாலும் சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை : மத்திய வங்கி ஆளுநர்



எவர் எத்தகைய யோசனைகளை முன்வைத்தாலும் அரசாங்கம் கடன் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லையென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.


நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கடன் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது மிக ஆபத்தானதென தெரிவித்துள்ள அவர், நாட்டின் பொருளாதார பிரச்சினையை சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லாமல் உள்நாட்டிலேயே முகாமைத்துவம் செய்துகொள்ள முடியமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நிபந்தனைகளுக்கு அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால் நாட்டிற்கு முதலீடுகளோ சுற்றுலா பயணிகள் வருகையோ இடம்பெறாமல் விடலாம்.


அவ்வாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்வதற்கு சென்றால் அவர்கள் கண்டிப்பாக வட்டி வீதத்தை அதிகரிப்பதாகவும் நாணயத்தின் பெறுமதியை குறைக்க இடமளிக்குமாறும் நாட்டின் வளங்களை விற்பனை செய்யுமாறு ஓய்வூதிய கொடுப்பனவை குறைக்குமாறும் கூற வாய்ப்புண்டு.


அதுமட்டுமன்றி பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டி வரும். நாட்டின் நெருக்கடி நிலைமையை சிறந்த முகாமைத்துவம் மூலம் தீர்க்கமுடியமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


லோரன்ஸ் செல்வநாயகம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்