தேசிய மின் உற்பத்திக்கு மற்றுமொரு பாரிய சிக்கல்!
மத்திய மலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வேகமாக தாழ்ந்து வருகிறது.
காசல்ரி, மவுசாகலை, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளன.
தேசிய மின் உற்பத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்யும் காசல்ரி நீர்த்தேககத்தின் நீர் மட்டம் என்றுமில்லாதவாறு தாழ்ந்துள்ளது. தற்போது சுமார் 15 அடிவரை தாழ்ந்துள்ளதாக மின்சாரதுறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தாழ்ந்து காணப்படுவதனால் நீரில் மூழ்கிகிடந்த கட்டடங்கள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளன.
நீர் ஓடைகள், அருவிகளின் நீர் வற்றிக்காணப்படுவதனால் சிறிய நீர் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியும் பாரிய அளவில் குறைவடைந்துள்ளன.
நீர்த்தேக்கங்களின் அருகாமையில் உள்ள பற்றைக்காடுகளில் மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும், பொழுதுபோக்குவதற்காகவும் தீ வைப்பதனால் நீரூற்றுக்கள் அற்றுப்போய் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அபாயமும் காணப்படுகின்றன.
எனவே காடுகளுக்கு தீ மூட்டுவதனை உடன் நிறுத்துமாறு பொது மக்களிடம் சூழல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ச்சியாக இந்த வரட்சியான காலநிலை காணப்படும் பட்சத்தில் விவசாயத்துறையும் பாதிக்கப்பவதற்கான அறிகுறிகளும் காணப்படுகின்றன.
எனவே நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வரட்சியான காலப்பகுதியில் மரங்களை தறிப்பதனை உடன் நிறுத்தப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments: