Top News

இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!




கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றும் பணி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

நெருக்கடியான இக்கால கட்டத்தில் இது தொடர்பில் நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவிக்கையில், கர்ப்பிணி தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணியில் உயர் நிலையை கொண்ட நாடாக இலங்கை விளங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரையில் பொது மக்களின் 60 வீதமானோருக்கு 2 தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளன.

ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொண்டவர்ளின் எண்ணிக்கை 70 வீதமாகும். 3 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் 50 வீதம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பிரதேச மட்டத்திலும், சுகாதார அதிகாரி பிரிவுகளிலும் இது தொடர்பான நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சில் அமைச்சரின் தலைமையில் எளிமையான வைபவம் ஒன்று நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post