சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டம் : அதிரடியாக 90 சதவீத ஆசிரியர்களை பணி இடை நீக்கம் செய்த சிம்பாப்பே அரசு
ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டிய நிலையில் சிம்பாப்பே நாட்டில் 90 சதவீத ஆசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிம்பாப்பே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக அரசுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.
பாடசாலைக்கு வராத ஆசிரியர்கள் மூன்று மாதங்களுக்கு பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு கல்வி அமைச்சகம் கடந்த வியாழன் அன்று எச்சரித்திருந்தது.
எனினும் போராட்டம் தொடரும் நிலையில், பொதுப் பள்ளிகளில் பணி புரியும் சுமார் 1,40,000 பேரில் 1,35,000 ஆசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
90 சதவீத ஆசிரியர்களை அரசு பணி இடை நீக்கம் செய்த பிறகு சிம்பாப்பேயில் எந்தப் பாடசாலையும் இயங்கவில்லை. தலைநகர் ஹராரேயில் உள்ள பாடசாலை வகுப்பறைகள் மற்றும் மைதானங்களில் மாணவர்கள் விளையாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்கள் கல்வி கற்பது பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தால் பாடசாலைகள் இயக்கம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
ஜனாதிபதி எம்மர்சன் மங்காக்வா தலைமையிலான சிம்பாப்பே அரசு, அமெரிக்க டொலர் மதிப்பில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்திவிட்டு சிம்பாப்பே டொலர்களுக்கு அதை மாற்றியுள்ளது. அதனால் ஆசிரியர்களின் சம்பள விகிதம் குறைந்து விட்டதாக முற்போக்கு ஆசிரியர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் குண்டர் முறைகளை பயன்படுத்தி ஆசிரியர்களை வேலைக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
0 Comments: