பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தாவிடின் மாற்றுத்தீர்மானம் - லலித் எல்லாவெல
(இராஜதுரை ஹஷான்)
மக்கள் மத்தியில் செல்ல முடியாத இக்கட்டான நிலைமையினை அரசியல்வாதிகள் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். எரிபொருள், எரிவாயு பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவாக தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும். பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தாவிடின் மாற்றுத்தீர்மானத்தை முன்னெடுக்க நேரிடும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவெல தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் பற்றாக்குறை, எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவற்றால் நாட்டு மக்கள் பாரிய அசௌகரியங்களை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள்.
ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் வீதிக்கி இறங்கி மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஆளும் கட்சியின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்காவிடின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் ரீதியில் மாற்றுத்திட்டங்களை முன்னெடுக்க நேரிடும். மக்களின் கோரிக்கைகமைய அரசாங்கம் செயற்பட வேண்டும்.
நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல் இலாபம் தேடிக் கொள்வதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரசியல் நோக்கத்தை கருத்திற் கொண்டு பரப்பி விடப்படும் போலியான செய்திகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் அமையும் என்றார்.
0 Comments: