Headlines
Loading...
நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுக்கிறேன் - ஜனாதிபதி கோட்டாபய

நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுக்கிறேன் - ஜனாதிபதி கோட்டாபய



பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊத் (Faisal bin Farhan Al Saud) அவர்களிடம் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சருடன் இன்று, (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

விவசாயம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி, தொழிநுட்ப மேம்பாடு மற்றும் துறைமுக நகர் சார்ந்த வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கொவிட் தொற்றுநோயின் காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட தாக்கம் தொடர்பில், இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊத் அவர்களின் அவதானம் செலுத்தப்பட்டதுடன், பரிமாற்றங்கள் குறைதல், சுற்றுலாத் துறையின் வீழ்ச்சி, மின் உற்பத்தியில் வறட்சியான காலநிலையின் தாக்கம் மற்றும் ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான தேவை பற்றியும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தமது நாடும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்ட சவுதி வெளிநாட்டு அமைச்சர், இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நசீர் அல் பர்ஹாத், சவுதி வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அப்துல் ரஹ்மான் அல் தாவூத், வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

0 Comments: