மூளையை அடமானம் வைத்தாரா முஷர்ரப், பொய்யே அரசியல் மூலதனமா...?


இலங்கையில் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு கொண்டிருந்தன. முழு இலங்கை முஸ்லிம்  மக்களும் வேதனையால் வெந்து கொண்டிருந்தனர். இச் சந்தர்ப்பத்திலேயே 20ம் அரசியலமைப்பு சீர்திருத்தம் பாராளுமன்றத்துக்கு வந்தது. இதற்கு முஸ்லிம் பா.உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என முழு இலங்கை முஸ்லிம்களும் நம்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், முஸ்லிம் கட்சி தலைவர்கள் தவிர்ந்து முஸ்லிம் கட்சிகளின் அனைத்து பா.உறுப்பினர்களும் அதற்கு  ஆதரவாக வாக்களித்திருந்தனர். 


தான் 20க்கு ஆதரவளித்தமைக்கும், அ.இ.ம.கா தலைவருக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என ஆணித்தனமாக பல ஊடகங்களில் மிக நீண்ட காலமாக கூறி வந்த பா.உ முஷர்ரப், தான் தலைவர் சொல்லியே வாக்களித்தாக கூறி, தற்போது அ.இ.ம.கா தலைவரை சத்தியத்துக்கு அழைத்துள்ளார். இங்கு அ.இ.ம.கா தலைவர் மக்களிடம் கூறியது உண்மையா அல்லது பொய்யா என்பதை ஆராய்வதற்கு அப்பால், சமுக வலைத்தளங்களில் இக் குறித்த விடயத்தில் முன்னுக்கு பின் முரணான கருத்தை தெளிவாக பதிவு செய்துள்ள பா.உ முஷர்ரப் ஒரு மஹா பொய்யன் என்பது உறுதியாகியுள்ளது. 


இலங்கை முஸ்லிம்கள் ஜனாஸா எரிப்பின் காரணமாக வேதனையால் வெந்து கொண்டிருந்தனர். இதனை அந் நேரத்தில் தற்போதைய அரசாங்கம் சிறிதேனும் கணக்கில் கொள்ளவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இக் கொடூர அரசாங்கத்தின் பலத்தை மேலும் அதிகரிக்க கொண்டுவரப்பட்ட 20க்கு ஆதரவளித்தமை தவறு. இதனை அ.இ.ம.கா தலைவர் அல்ல, வேறு யார் சொல்லி ஆதரித்திருந்தாலும் தவறே. இதனை நீங்கள் அ.இ.ம.கா தலைவர் சொன்னதாலேயே செய்திருந்தால், உங்களுக்கு சுயபுத்தி இல்லையா? 


அ.இ.ம.கா தலைவர் தவறான வழியை காட்டினாலும், அதனை சிறுதும் கேள்விக்குட்படுத்தாமல் ஆதரிக்குமளவு பா.உறுப்பினர் முஷர்ரப் நல்லவரா? அப்படி நல்லவராக இருந்தால், அ.இ.ம.கா தலைவரின் மனைவி காலையில் சிறைக்கு செல்கிறார். பா.உறுப்பினர் முஷர்ரப் மாலையில் இனவாதியான கம்மன்பிலவுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றார். இவர் அ.இ.ம.கா தலைவருக்கு மதிப்பளிப்பவராக இருந்தால் இதனை செய்திருப்பாரா? 


இவர் 20வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமைக்கு மாத்திரமே வாக்களித்திருந்தார். அ.இ.ம.கா தலைவர் 20க்கு வாக்களிக்க சொல்லி, அதற்காகவே இவர் இதற்கு வாக்களித்திருந்தால் முழுமையாக அச் சீர்திருத்தத்தை ஆதரித்திருக்கலாமே! அது கூட செய்யவில்லை. நடுவில் குருட்டு கொக்கு விளையாட்டு விளையாடிதன் நோக்கம் என்ன? இதன் மூலம் ஒரு கையை அரசுக்கும், மறு கையை தனது கட்சிக்கும் நீட்டி யாவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தார். இத் திறமையான ஏமாற்றுகையை, ஏமாற்றலையே வாழ்வாக கொண்ட ஒருவராலேயே செய்ய முடியும். 


இவ்விடயத்தில் பா.உறுப்பினர் முஷர்ரப் அ.இ.ம.கா தலைவரை சத்தியத்துக்கு அழைத்துள்ளார். தான் குறித்த விடயத்தை இறைவன் மீது சத்தியமிட்டு நிரூபித்து, அ.இ.ம.கா தலைவரை சத்தியத்துக்கு அழைத்திருக்க வேண்டும். அதுவே முறை.. அவர் அப்படி எந்த சத்தியமும் பன்னவில்லை. அ.இ.ம.கா தலைவரே சத்தியம் செய்து, தன்னை நிரூபிக்க வேண்டும் என கூறுவதில் உள்ள நியாயம் என்ன?  


சில வேளை, தான் எத்தனை பொய் சத்தியம் பன்னுவது என்ற சிந்தனையில் அதனை தவிர்த்திருக்கலாம். இவர் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு அரசியலால் ஒரு ரூபாயும் உழைக்க மாட்டேன் என பள்ளிவாயலில் வைத்து சத்தியம் செய்திருந்தார். தற்போது அமைச்சருக்குரிய வாகனங்களை பயன்படுத்துகிறார். பா.உறுப்பினராக இருந்த போது அரச வாகனமொன்றையும் பயன்படுத்தியிருந்தார். ஒரு எம்.பிக்கு முறையான விதத்தில் கிடைக்கும் வாகன பேர்மிடை கூட பயன்படுத்த மாட்டேன் என கூறி, பள்ளிவாயலில் சத்தியமிட்டவர், அரச வாகனங்களை பயன்படுத்துவது பொருத்தமானதா?  இவரின் சத்தியத்தின் பெறுமானம் இதுவே! 


இவர் இராஜாங்க அமைச்சை பொறுப்பேற்ற பிறகான பொது மக்கள் எதிர்ப்பு கடுமையாகியுள்ளது. இவரின் உருவ பொம்மைக்கு பொத்துவில் மக்கள்  செருப்பால் அடித்து, எரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் இரு நாட்கள் முன்பு உரையாற்றிய அ.இ.ம.கா தலைவர் மிக கடுமையாக இவர்களை விமர்சித்திருந்தார். இவரது இவ் விமர்சனம் மேலும் இவரை தாக்கியிருந்தது. இதிலிருந்து இவர் தன்னை தற்காத்துகொள்ள ஏதாவது செய்தாக வேண்டும். நாங்கள் மாத்திரமல்ல, அவர்களும் அப்படித் தான் எனும் நிலையை தலைவர்களுக்கு உருவாக்கி விட்டால், இவர் ஓரளவு விமர்சனங்களில் இருந்து தப்பித்துகொள்வார். இதற்காகவே இந்த அபாண்டத்தை கட்டவிழ்த்துள்ளார். 


இவர் பாராளுமன்றம் நுழைந்தது கூட பல பொய் வாக்குறுதிகளால் சாத்தியமானதே! அன்றும், இன்றும் இவரது அரசியலுக்கு பொய்யே மூலதனம். இது நீண்ட நாட்களுக்கு நிலைக்கும் அரசியல் பயணமல்ல. 


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.