மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் நாமும் காலி முகத்திடலுக்கு செல்ல நேரிடும் - ரணில் விக்ரமசிங்க



(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)


மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நடப்பு அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அனைத்து அரசியல் கட்சிகளும் பாரம்பரிய சம்பிரதாய அரசியல் கொள்கையில் இருந்து விடுபட வேண்டும். மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் நாமும் காலி முகத்திடலுக்கு சென்று உணவு உட்கொள்ள நேரிடும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.


பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (22) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிக்கும் போது முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பில் வினவப்பட்டது. ஆம் நான் ஹிஜாப் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.


முஸ்லிம் பெண்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொள்ளவில்லை. இவ்விடயம் குறித்து மேலதிகமாக கதைக்க விரும்பவில்லை.


சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் முக்கிய விடயங்களை ஆரம்பத்தில் தெரிந்து கொண்டோம்.


பலி கொடுக்கும் வகையில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது முறையற்றது. குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளன. முதலில் அந்த அறிக்கையை பாருங்கள், சபையில் அதனை சமர்ப்பியுங்கள்.


ரம்புக்கனை சம்பவ இடத்திற்கு பிரதி சொலிசிடர் ஜெனரல் சென்றுள்ளமை அவசியமற்றது. துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு யார் ஆணை பிறப்பித்தது என்று இதுவரையில் குறிப்பிடப்படவில்லை.


'பி' அறிக்கை 'எ' அறிக்கையாக்கப்பட்டுள்ளது. பிறகு பி அறிக்கையில் பெயர் நீக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு் பிரயோகத்திற்கான காரணம் பி அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் இச்சம்பவத்தில் அவ்வாறு குறிப்பிடப்பிடவில்லை. முதலில் யார் ஆணை பிறப்பித்தது என்பதை குறிப்பிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுங்கள்.


றம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த லக்‌ஷான் எரிபொருள் பெற்றுக் கொள்ளவதற்காக சென்றே உயிரிழந்தார்.


நாம் அரசியலமைப்பினை திருத்தம் செய்வதற்காக கூடியுள்ளோம். மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண அவதானம் செலுத்த வேண்டும்.


சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்றிற்கு குறிப்பிடுங்கள். நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையில் சீனாவுடனான கடன் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


மேற்குலக நாடுகள் கடன் வழங்கும் போது கடன் செலுத்தலுக்கு காலவகாசம் வழங்கும் அல்லது கடன் நிவாரனம் வழங்கும், சீனா பிறிதொரு முறையில் கடன் வழங்குகிறது. கடன் செலுத்தலுக்கு கடன் வழங்குகிறது.


எதிர்வரும் மாதம் முதல் எரிபொருள், எரிவாயு பிரச்சினை தோற்றம் பெறும் அப்பிரச்சினை குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.


மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சம்பிரதாய அரசியல் முறைமையில் இருந்து விடுப்பட்டால் மாத்திரமே தீர்வு காண முடியும் என்றார்.