“செவிடன் காதில் ஊதிய சங்கு போலன்றி, கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து!


சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பு திருத்த பிரேரணைக்கு பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து பிரதிநிதிகளும் வாக்களிப்பதன் மூலமே, இந்த நாட்டை மீண்டும் சுபீட்சம் அடையச் செய்ய முடியும் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.


எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று காலை (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,


“ஜனாதிபதி ஆவதற்கு முன்னரே கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர் என நாங்கள் பல தடவை கூறி இருக்கிறோம். கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா, நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் ஒருமுறை கருத்து தெரிவிக்கையில், “பைத்தியக்காரன் ஒருவன் நாட்டின் ஜனாதிபதியாகி, அவரிடம் இவ்வளவு அதிகாரங்களும் ஒப்படைக்கப்படுமானால், இந்த நாடு குட்டிச்சுவராகி, நாசமடைந்துவிடும்” என்றார். இன்று நான் அவ்வாறு சொல்லவில்லை, வீதிகளிலும் காலி முகத்திடலிலும் பல நாட்களாக ஆர்ப்பாட்டம் செய்து வருபவர்கள் கோட்டாவுக்கு எதிராக கோஷமிடுவதுடன், “கோட்டா கோ ஹோம்” எனக் கூறுகின்றனர். இவர்களில் புத்திஜீவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றுமன்றி அவரது கட்சிக்கு வாக்களித்த இலட்சக்கணக்கானோர் அவருக்கு பைத்தியம் என்று கூறுகின்றனர். எனவே, அவர் செய்த தவறுகள்தான் இந்த நிலை ஏற்பட்டமைக்கு காரணம்.


வரிகளைக் குறைக்க வேண்டாம் என்றோம். அதற்கு செவிசாய்க்காமல் அதனை மீறி செயற்பட்டார். விவசாயத்துக்கு தேவையான அசேதன பசளைகளை வழங்குங்கள் எனக் கூறினோம். அதுவும் நடைபெறவில்லை. ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகளை இராணுவத்தைப் பயன்படுத்தி கழுத்தைப் பிடித்து தள்ளுவோம் என்று கூறினார். இவரது பிழையான முடிவுகளாலேயே ஒரு இலட்சம் விவசாயிகளும் பசியாலும் பட்டினியாலும் வாடுகின்றனர். பாதைகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.


பணத்தை அச்சடிக்க வேண்டாம் என்றோம். கணக்குவழக்கின்றி அதனையும் செய்தனர் இவையெல்லாம் இவரது தீர்மானங்களே. அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை நேர்த்தியான முறையில் நடைமுறைப்படுத்துங்கள் என்றோம். அதையும் கேட்கவில்லை. இன்று தினக் கூலிகள் மாத்திரமின்றி அரச அதிகாரிகளால் கூட வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் இவரது பிழையான முடிவே. நாட்டின் பொருளாதார ஸ்தீரம், டொலரின் இருப்பு தொடர்பில் பாராளுமன்றத்துக்கு வெளிப்படுத்துங்கள் என்றோம். ஆகக் குறைந்தது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைமைகளுக்காவது கூறுங்கள் என்றோம். அதையும் கருத்தில் எடுக்கவில்லை. அதேபோன்று, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுங்கள் என்றோம். நடைபெறவில்லை. எனவே, ஒவ்வொரு விடயங்களிலும் கோட்டா தவரிழைத்திருக்கிறார்.


20 வது திருத்தத்தைக் கொண்டுவந்த போது, அவருக்கு எதிராக செயற்பட்ட கட்சிகளின் எம்.பிக்களை பிரித்தெடுத்து அதனை நிறைவேற்றினார். திட்டமிட்டு செய்த நடவடிக்கையே இது. இவ்வாறு பார்க்கின்ற போது, அன்று கொல்வின் கூறியது போன்றே அவர் செயற்படுகின்றார். எனவேதான் அவரை மக்கள் வீட்டுக்குப் போக சொல்கின்றனர். 


கோட்டாவுக்கு நாட்டு மக்கள் மீது பாசம் இருந்தால் மக்களின் வேண்டுகோளை ஏற்று, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம். இவ்வாறு வேண்டுகோள் விடுக்கும் மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் பாராளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி, அதிகபட்சம் என்ன செய்ய முடியும் என தேடி ஆராய்ந்து வருகிறோம். 


மீண்டும் 19 வது திருத்தத்தைக் கொண்டுவந்து, நல்ல அம்சங்களை புகுத்தி ஜனாதிபதி முறைமையை நீக்கி நாட்டை சரியான வழியில் கொண்டு நடத்த எத்தனிப்போம். மக்களின் வேண்டுகோளை ஏற்று 21 வது திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு ஆலோசித்து வருகிறோம். சஜித் பிரேமதாசவின் தலைமையில் இதனை முன்கொண்டு செல்ல முயற்சிக்கின்றோம். சபாநாயகர் மற்றும் சட்டமா அதிபரிடம் இந்தப் பிரேரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 எம்.பிக்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தார்மீக பொறுப்பு உள்ளது. ஜனாதிபதி மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாது, ‘செவிடன் காதில் ஊதிய சங்கு போல்’ இருக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினர்களிடமே இந்தப் பிரேரணையை நிறைவேற்றும் கடப்பாடு உண்டு. நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி, 19 வது திருத்தத்தின் ஊடாக பொலிஸ், நீதித்துறையின் சுயாதீனத் தன்மையைக் கொண்டு வருவதும் இவர்களின் கடப்பாடாகும். 


பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டு, இந்த அசாதாரண சூழ்நிலையை இல்லாமல் ஆக்குவதற்கு இதன் மூலம் வித்திடலாம். இதன்மூலமே நாடு ஸ்திரமடையும். எனவே, எமது திருத்தத்துக்கு எல்லா சக்திகளும் ஆதரவளித்து, நாட்டிலே நல்லாட்சியைக் உருவாக்கி, நாட்டின் அவப் பெயரை இல்லாமல் ஆக்க முன்வர வேண்டும்” என்று கூறினார்.