article
Political
ஆளுமைகள்
கட்டுரைகள்
"அனைவராலும் நேசிக்கப்பட்டவர் சபாநாயகர் பாக்கீர் மாக்கார்" Speaker Muhammad Abdul Bakeer Markar
சமூகத்தில் எண்ணற்ற மக்கள் தோன்றி, வாழ்ந்து மறைகின்றார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் தங்களுக்காக வாழ்ந்தவர்கள். அவர்களது மறைவோடு அவர்களது நினைவும் மறக்கப்படுகின்றது. ஆனால் ஒவ்வொரு சமூகத்திலும் காலத்துக்கு காலம் சிலர் தோன்றுகின்றார்கள் அவர்கள் தனக்காக மட்டும் வாழாது, சமூகத்தின் நன்மைக்காக அர்ப்பணமானவர்கள். தங்களது தனிப்பட்ட வாழ்வு என்ற நதியை சமூகம் என்ற சமுத்திரத்தில் சங்கமிக்கச் செய்தவர்கள். சமூக மேம்பாட்டையும், நல்வாழ்வையும் தங்களது இலட்சியமாக வரித்துக் கொண்டவர்கள். இத்தகையவர்களின் வாழ்வும் அதன் நிகழ்வுகளும் சமூக வரலாற்றோடு இரண்டறக் கலந்து அதன் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிடுகின்றன. அத்தகையவர்களின் வாழ்க்கையினூடே நாம் அவர்களது கால சமூகத்தை தரிசிக்கின்றோம். அதன் வளைவு நெளிவுகளை இனங்கண்டு கொள்கிறோம். அவ்வாறு இனங்கண்ட இலங்கை தாய் நாடு ஈன்றெடுத்த மிக முக்கியமானதொரு பன்முக ஆளுமை கொண்ட தலைவராக போற்றப்படுபவராக மர்ஹூம். எம்.ஏ.பாக்கீர் மாக்கார் திகழ்கின்றார்.
தேசிய ஒருமைப்பாடு, தேசிய ஐக்கியம் மற்றும் தேச நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்த இவர் பிரபல வர்த்தகரும் ஆயுர்வேத வைத்தியருமான மர்ஹூம் ஹக்கீம் அலியா மரைக்கார், ராஹிலா தம்பதியினரின் புதல்வனாக 1917 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி பேருவளை மருதானை ஊரில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை பேருவளை மருதானை அல் பாஸிய்யத்துல் நஸ்ரியா வித்தியாலயத்தில் கற்று பின்னர் 1924 ஆம் ஆண்டு கொழும்பு 12 இல் அமைந்துள்ள சென். செபஸ்தியன் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலும் கற்று பின்னர் அதே கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். இவர் ஆசிரியராக கடமையாற்றும் போது கல்லூரியின் அதிபராக மர்ஹூம் டி.பி ஜாயா அவர்கள் இருந்தார்.
அங்கிருந்து 1939 ஆம் ஆண்டில் சட்டக் கல்லூரியில் சேர்ந்து, இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமாகவே 1940 ஆம் ஆண்டு, நாட்டை பாதுகாக்கும் தேசிய நலனில் தானும் பங்காளியாக மாற வேண்டும் என்ற நன்நோக்கில் தேசிய விமான பாதுகாப்புப் படையில் சேர்ந்தார். அவரது துணிவையும், தியாக உணர்வையும் ஆற்றலையும் கண்ட அக்கால ஆட்சியாளர்கள் அவரை பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பினர். இந்தியா சென்று பயிற்சியை முடித்துவிட்டு வந்து கொழும்பு மற்றும் களுத்துறை பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் மும்முரமாக ஈடுபட்டார்.
இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவுக்கு வர 1945 இல் மீண்டும் சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வியை தொடர்ந்தவராக 1947 ஆம் ஆண்டு பேருவளை நகர சபைத் தேர்தலில் மருதானை வட்டாரத்தில் போட்டியிட்டதன் மூலம் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்தார். 1950 ஆம் ஆண்டு தொடக்கம் பல வருடங்களாக நகர சபையின் தலைவராக பதவி வகித்தார்.
பல்லின மக்கள் வாழும் பேருவளையின் சமூக அபிவிருத்திக்காகவும், பௌதீக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு திட்டங்களையும், முன்னெடுப்புகளையும், சமுதாய மேம்பாட்டு திட்டங்களையும் மேற்கொண்டு முன்னேற்றமடைந்த பிரதேசமாக மாற்றியமைத்தார். பேருவளை பிரதேச அபிவிருத்திக்கு முன்னோடியாக செயற்பட்டார். பேருவளை பிரதேச ஆளுகையை நம்பத்தகுந்ததான மாற்றத்துக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். பேருவளை நகர சபைக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை நல்கினார். பேருவளைக்கான அரசியல் ரீதியான சமூகவியல் பார்வையை விரிவுபடுத்தியே தனது பணிகளை முன்னெடுத்தார்.
பின்னர் 1960 மார்ச் பொதுத் தேர்தலில் அவர் பிரதேச மட்ட அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு நகர்ந்து, ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் பேருவளை தொகுதியில் போட்டியிட்டு 9339 வாக்குகள் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார்.
அதிலிருந்து பல பதவிகளை வகித்து அவர் 1977 தொடக்கம் 1978 வரை பிரதி சபாநாயகராகவும், 1978 முதல் 1983 வரை சபாநாயகராகவும் பதவி வகித்தார். இக்காலப் பகுதியில் தனது மும்மொழி கட்டளையுடன் தனது கடமைகளை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றிய பாக்கீர் மாக்கார், பாராளுமன்ற உறுப்பினர்களையும், பாராளுமன்ற நிர்வாகத்தையும் திருப்தியடையச் செய்தார்.
1981 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தன, பிரதமர் ஆர். பிரேமதாச ஆகியோர் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் டயானா தம்பதியினரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்ற போது, இலங்கை நாட்டின் பதில் ஜனாதிபதியாக மர்ஹூம் பாக்கீர் மாக்கார் கடமையாற்றினார்.
1983 முதல் 1988 வரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும், 1988 இல் இருந்து 1993 வரை தென் மாகாண ஆளுநராகவும் பணிபுரிந்தார். மர்ஹூம் பாக்கிர் மாக்கார் அவர்களின் தெளிந்த பார்வையும், தூய உள்ளமும், துணிந்து செய்த பணிகளும் அவரை புனிதராக புடம்போட்டது.
இவர் அரசியலிலும், அரசியல் ரீதியிலான சமூக செயற்பாடுகளிலும் மாத்திரம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், சமூகத்தின் ஒட்டுமொத்த எழுச்சிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, அக்காலப்பகுதியில் சமூக ஒழுங்குகளில் தன்னால் முடியுமான மாற்றத்தை ஏற்படுத்த பலரோடு இணைந்தும், பலரை இணைத்துக் கொண்டும் செயற்பட்டார்.
நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் வாலிபர்களை ஓரணியில் திரட்டுவதற்காக தமது காலத்தை செலவிட்டார். கிராமம் கிராமமாகச் சென்று இளைஞர்களை ஒன்று திரட்டி அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தை உருவாக்கினார். இது பாக்கீர் மாக்கார் அவர்களின் மிகப்பெரும் சாதனையாகும். இதன் மூலம் பல அபிவிருத்தி அடையாத பின்தங்கிய கிராமங்கள் எழுச்சி பெற்றதோடு, இன்னும் பல அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்க ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தார். அப்போது அன்னார் இளைஞர்களுடன் இணைந்து செயல்படும் போது அவரும் ஒரு இளைஞராகவே பரிணமித்து அவர்களுடன் சங்கமமாகி பல காத்திரமான வினைத்திறன் கூடிய இளைஞர்களை உருவாக்கினார். அந்த வரிசையிலே தான் தனது மகன் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரையும் அந்த வழியில் நடக்க அர்ப்பணித்தார்.
கிராமிய ஆளுமைகளை தேசிய நீரோட்டத்தில் பங்கேற்கச் செய்து, தேசிய ஆளுமைகளாக தகைமைப்படுத்துவதிலும், உரிய இடத்தை அவர்களுக்கு வழங்குவதிலும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் அன்று போல் இன்றும் செயலாற்றி வருகிறது. இவ்வாறு உருவாகிய தலைவர்களாக என்.எம்.அமீன், சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், முஹ்சின், என்.எம்.சஹீத், லுக்மான் ஷிஹாப்தீன், பீ.எம். பாரூக், ஷாம் நவாஸ் உட்பட நூற்றுக்கணக்கான துடிப்புமிகுந்த இளைஞர் பரம்பரையொன்றையே உருவாக்கினார்.
இந்த வகையில் பாக்கீர் மாக்கார் அவர்களின் நாடளாவிய பயணங்களும் அவரால் சமூகம் பெற்ற நற்பயன்களும் ஏராளம். முன்னாள் தலைவர்கள் பிராந்திய விஜயங்களை மேற்கொள்வது அது வெறுமனே விஜயங்களோடு சுருங்கியதல்ல. பிரதேச தேவைகளுக்கு தீர்வுகளை வழங்கும் பயணமாகவே அமைந்திருந்தது. இன்று அந்நிலை மாறியுள்ளது.
இவர் எமது தாய்நாட்டின் தமிழ் சமூகத்தால் விரும்பப்பட்டவர். அன்றைய காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் சென்ற வேளை, யாழ்ப்பாண மாநகர சபையில் பொதுமக்களினால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அன்னார் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அனைத்து சமூகத்தின் நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்றார். அவர் சிங்கள மக்களால் எப்போதும் நேசிக்கப்பட்டவராகவும் பாராட்டப்பட்டவராகவும் இருந்துள்ளார்.
பாக்கீர் மாக்கார் அவர்களின் மூத்த புதல்வரும், முன்னாள் வெகுசன தொடர்பாடல் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்அவர்கள், தனது தந்தையின் தொலைநோக்கு பார்வையை இன்றுவரை முன்னெடுத்துச் செல்கின்றார்.
1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் திகதி பாக்கீர் மாக்கார் தனது 80 வது வயதில் இறையடி சேர்ந்தார்.
அவரது அனைத்து பணிகளையும் எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக!-
உஸாமா நவாஸ் பேருவளை (Vidivelli Paper)
0 Comments: