(அம்னா இர்ஷாத்)
நடந்து முடிந்த தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு முன்னதாகவே, குறித்த பரீட்சை வினாத்தாளின் 3 கேள்விகள், குருணாகல் மாவட்டம் அளவ்வ பகுதி ஆசிரியர் ஒருவர் ஊடாக மாதிரி வினாத்தாள்
கலந்துரையாடலில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவ்வாறு இடம்பெற்றிருப்பின் அம்மூன்று கேள்விகளுக்கும் புள்ளிகள் வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர கருத்து தெரிவிக்கையில்
‘ உண்மையில் எமக்கு முதலில் 16 கேள்விகள் கலந்துரையாடப்பட்டதாகவே தகவல் வந்தது. அது குறித்து நாம் ஆராய்ந்தோம். இதன்போது குறித்த 16 கேள்விகளில் 3 கேள்விகள் பரீட்சை வினாத்தாள் கேள்விகளுடன் ஒத்துப் போவதை நாம் கண்டறிந்தோம். அவை நூற்றுக்கு நூறு வீதம் சமமானவை என நான் கூற மாட்டேன். இது குறித்து கேள்வி தயாரித்த குழுவுடன் நான் கலந்துரையாடினேன். விசாரணைகளை முன்னெடுக்க குழுவொன்றினையும் நியமித்துள்ளேன். அக்குழு, இந்த கேள்விகள் கலந்த்துரையாடப்பட்டதாக கூறப்படும் பகுதிக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதில் தெளிவாக தெரியவருமானால், பரீட்சைக்கு முன்னர் அக்கேள்விகள் கலந்துரையாடப்பட்டுள்ளன என்ற விடயம், அம்மூன்று கேள்விகளையும் கைவிட்டு ஏனைய கேள்விகளுக்கு மட்டும் புள்ளி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்படியானால் 40 கேள்விகளில், 37 கேள்விகளுக்கு மட்டும் நூற்றுக்கு எத்தனை என்ற அடிப்படையில் புள்ளி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ‘ என தெரிவித்தார்.
0 Comments: