Feb 4, 2018

மு.காவை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்கின்றார் ஹக்கீம்முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தலைவர் அஷ்ரபால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை அதன் தற்போதைய தலைமைத்துவம் ஹக்கீம் அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்கின்றார். எனவே, ஹக்கீமை ஒதுக்கி கட்சியை பாதுகாக்கின்ற போராட்டத்தை மு.கா. போராளிகள் முன்னெடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
காத்தான்குடியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் அண்மையில் காத்தான்குடிக்கு வருகைத் தந்திருந்தார். இதன்போது அவர் நான் எனது பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவே தேர்தலில் பாடுபடுகின்றேன் என்றும் அரசியலுக்காக வடகிழக்கு இணைப்பு பற்றி பேசுவதாகவும் கூறியிருந்தார். 

காத்தான்குடி நகர சபையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் நான் தோற்றாலும் பெப்ரவரி 11ஆம் திகதிக்கு பின்னர் எனது அரசியல் பலம் அதிகரிப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அண்மையில் ஜனாதிபதி காத்தான்குடி வருகைத் தந்த போது என்னை அவரது காரில் ஏற்றிக்கொண்டு பொலன்னறுவை வரை அழைத்துச் சென்றார். பின்னர் அவரது இல்லத்தில் இரவு உணவினை சாப்பிட்டு விட்டு ஜனாதிபதியுடன் பல விடயங்களை நான் பேசினேன். ஜனாதிபதியுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பினை வைத்துள்ளோம். அதுவே இங்குள்ள சிலருக்கு பிரச்சினை. இத்தேர்தல் முடிவுகளை வைத்து என்னுடைய அரசியலை நிறுத்த வேண்டிய எந்த வித தேவையும் எனக்குக் கிடையாது.  
இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று அதனை அரசுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்பது எங்களுக்காக அல்ல. மாறாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் அரசுடன் அதிகாரத்துடன் தலைநிமிர்ந்து பேசுவதற்காகவே. 

என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் சுமத்தப்பட்ட 20 குற்றச்சாட்டுக்களுக்கு நாங்கள் தெளிவாக ஆதாரபூர்வமான பதிலை வழங்கியுள்ளோம். இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறு நடைபெற்றுள்ளது இதுவே முதல் தடவை. நாங்கள் மிகத்தெளிவாக இருக்கின்றோம். அதனாலேயே அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான பதிலை வழங்கியுள்ளோம். எங்களுடைய பேச்சுக்கள் - தரவுகள் - ஆதாரங்கள் அனைத்துமே மிகத்தெளிவானது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது நாங்கள் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதில் அளிக்க முடியாத காத்தான்குடி மு.கா. ஆதரவாளர்கள் இறுதியில் அவற்றுக்கு பதில் அளிப்பதற்காக கட்சித் தலைவர் ஹக்கீமையே காத்தான்குடிக்கு அழைத்து வந்திருந்தனர். 
ஹக்கீம் மீது நாங்கள் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அவரே தனது வாயால் ஏற்றுக்கொண்டுள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அவர் பேசினார். 

ஆனால் அதில் ஒரு வார்த்தையாவது வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்று கூறவில்லை. 
“70 வருடங்களாக தமது உரிமைகளுக்காக போராடி வருகின்ற தமிழ் மக்களின் அபிலாஷைகளின் மீது மண் அள்ளிப்போடுகின்ற சமூகமாக நாங்கள் இருக்க மாட்டோம். நான் இந்த விடயத்தில் மெத்தனப் போக்கையே கடைபிடிப்பேன்.  சிவசிதம்பரம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோரின் நினைவுப் போருரைகளுக்குப் போய் வந்தேன் டயஸ் போராக்களின் நிகழ்வுகளுக்கு போய் வந்தேன்.ஆகவே எமது செயற்பாடுகள் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளுக்கு எதிராக இருக்காது அதற்குத் தடையாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் செயற்படாது ” என தெளிவாக ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார். 

“நீங்கள் இப்படி செயற்படுவதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படுவதற்கு ஒருவரை ஒருவர் எதிரிகளாகவும் - விரோதிகளாகவும் பார்ப்பதற்கு இந்தத்தலைமைத்தும் ஒருபோதும் செயற்படாது” என்றும் கூறினார். 

வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கை தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. இந்த மண்ணிலே வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் நாங்கள் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எப்போது வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டதே அன்று முதல் இந்த மண்ணில் இரத்த ஆறு ஓடியது. அன்று தான் ஒருவரை ஒருவர் விரோதிகளாக பார்த்துக்கொண்டனர். எப்போது வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டதோ பிள்ளையான் முதலமைச்சராகவும் நாங்கள் அமைச்சர்களாகவும் இருந்தோம். பின்னர் நஸீர் ஹாபிஸ் முதலமைச்சராகவும் தமிழ் சகோதரர்கள் அமைச்சர்களாகவும் இருந்தனர். இதனால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே எவ்வித பிரச்சினைகளுமின்றி நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றோம். நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. 

அரசியலமைப்புப் பேரவையில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் வடகிழக்கு இணைப்பு, சமஷ்டி ஆட்சி, ஜனாதிபதி ஆட்சி முறை நீக்கம் உள்ளிட்ட  பாரதூரமான மும்மொழிவுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவும் இவ்வாறு வடகிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அலட்டிக்கொள்ளாது என கூறுவது எவ்வளவு மடத்தனமான – பிற்போக்குத்தனமான கருத்து.
வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான நான் பேசுவது அரசியலுக்காகவோ – அரசியல் மேடைக்காகவே அல்ல. முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காகவே அதனைப் பேசுகின்றேன். 

ஒவ்வொரு முஸ்லிமும் இது பற்றி தெரிந்து வைக்க வேண்டும் என்பதற்காகவே பேசுகின்றேன். 
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் பேசத் தொடங்கினால் மேடை அதிர வேண்டும் - சமூகம் உணர வேண்டும் .ஆனால் ஹக்கீம் தற்போது ஒரு ஜோக்கரைப் போல நடந்து கொள்கின்றார். அவரை கட்சித் தலைமையிலிருந்து நீக்குவதை தவிர வேறு வழியில்லை. 

நாமே முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பக் காலப் போராளிகள். அக்கட்சி எனது மூச்சி. ஆனால் கட்சியின் தலைமைத்துவம் வகிக்கின்ற ஜோக்கருக்கு இந்தத் தேர்தலில் சரியான பாடத்தை நாங்கள் புகட்ட வேண்டும். 

முஸ்லிம்களின் உரிமைகளுக்காக – பிரச்சினைகளுக்காக குரல் எழுப்ப வேண்டிய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இன்று தமிழ் தலைமைகளினதும், டயஸ்போராக்களினதும் முகவர்களாக அவர்களது தாலத்துக்கு ஏற்பட ஆட்டம் போட்டு கூஜா தூக்குபவர்களாக மாறியுள்ளார் - என்றார். 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network