கரங்காவட்டை காணிப் பிரச்சினை; அரச அதிபர், அமைச்சர் ரிஷாட் பேச்சில் சாதகம்!

சம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்காவட்டையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 68 ஏக்கர் காணியில் பெரும்பான்மை சகோதரர்கள் வேளாண்மை செய்ய மேற்கொண்டிருந்த ஆரம்ப முயற்சி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலையீட்டினையடுத்து, தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், இந்தக் காணி தொடர்பான உரிமங்கள் பரீசிலனை செய்யப்பட்டு, முஸ்லிம்களுக்கு வேளாண்மை செய்ய அனுமதி வழங்கப்படுமெனவும் அம்பாறை அரசாங்க அதிபர் டீ.எம். ஐ. பண்டாரநாயக்க, அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ. சி எம். சஹீல் தெரிவித்தார்.

'முஸ்லிம்களுக்கு சொந்தமான இந்த காணியில் பெரும்பான்மை இன சகோதரர்கள் நெல் பயிரிடுவதற்காக உழவு நடவடிக்கைகளை முடித்திருந்தனர். இந்த விடயத்தை காணிச் சொந்தக்காரர்களின் சார்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் எடுத்துரைத்தோம். அம்பாறை அரசாங்க அதிபருடனும், பிரதேச செயலாளருடனும் தொடர்பு கொண்ட அமைச்சர், இந்த விடயத்தை எடுத்துரைத்ததுடன், இது தொடர்பான உண்மைத் தன்மையையும்; விளக்கி இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்த்துவைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் ரிஷாட்டுடனான பேச்சுவார்த்தையையடுத்து, பெரும்பான்மை இனத்தவர்கள் தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதை அரசாங்க அதிபர் நிறுத்தியுள்ளதுடன், காணிச் சொந்தக்காரர்களை அழைத்து அவர்களின் உரிமங்களையும் பரீசிலித்து நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்' என பிரதேசசபை உறுப்பினர் சஹீல் தெரிவித்தார். அத்துடன் இந்தப்பிரச்சினை தொடர்பில் சம்மாந்துறை பிரதேசசபை தவிசாளர் நௌஷாத்தும் அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிபெற்றுக்கொடுக்குமாறு வேண்டினார் என பிரதேசசபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் 1943ம் ஆண்டு தொடக்கம் சம்மாந்துறை கரங்காவட்டையில் பயிர்ச்; செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 1968ம் ஆண்டளவில் இவர்களுக்கு சொந்தமான சுமார் 68 ஏக்கர் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் (பெர்மிட்) வழங்கப்பட்டன. 1993ம் ஆண்டு பிரதேச செயலகத்தினால் இவர்களுக்கு உறுதியும் வழங்கப்பட்டுள்ளது. 1985ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த காணிகள் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்டவையென பிரகடனப்படுத்தப்பட்டன.

2003இல் அம்பாறை மாவட்ட செயலகம் குறிப்பிட்ட காணிகள், அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு சொந்தமானவை என பிரகடனப்படுத்தி ஒரு குளறுபடியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், முஸ்லிம்கள் தமக்கு சொந்தமான காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்த போது, 2013ம் ஆண்டு அம்பாறையில் நடைபெற்ற 'தயட்ட கிருல' வேலைத்திட்டத்தில் அந்தப் பிரதேசத்தில் இராணுவ சோதனைச் சாவடி ஒன்று நிறுவப்பட்டது. முஸ்லிம் விவசாயிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையே சிற்சில பிரச்சினைகள் ஏற்பட்டு, அதன் பின்னர் அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வந்ததனால், விவசாய நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டனர். 


இந்த நிலையில் தான் தற்போது பெரும்பான்மை இன விவசாயிகள் அந்த நிலத்தில் பயிரிடுவதற்காக உழவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறனதொரு நிலையில்தான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த நடவடிக்கைகளை நிறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்குமாறு அரச அதிபருடன் வேண்டியிருந்தார்.

இதே வேளை நேற்று காலை பாதிக்கப்பட்ட விவசாயக் காணிச் சொந்தக்காரர்கள், பிரதேசசபை உறுப்பினர் சஹீலின் தலைமையில் அந்தப் பிரதேச விகராதிபதியையும், பெரும்பான்மை இன விவசாயிகளையும் சந்தித்து, தமது நிலைப்பாட்டை எடுத்து கூறியதுடன், தமக்கு சொந்தமான காணிகள் என்பதற்கான ஆதாரங்களையும் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்தப் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் இடம்பெற்றதாகவும் தமது நியாயங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த விடயத்தில் தமக்கு உதவி செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினைக்கு வெகுவிரைவில் நிரந்தரமான தீர்வு தமக்கு கிடைக்குமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


- ஊடகப்பிரிவு
கரங்காவட்டை காணிப் பிரச்சினை; அரச அதிபர், அமைச்சர் ரிஷாட் பேச்சில் சாதகம்! கரங்காவட்டை காணிப் பிரச்சினை; அரச அதிபர், அமைச்சர் ரிஷாட் பேச்சில் சாதகம்! Reviewed by NEWS on October 16, 2018 Rating: 5