நாங்கள் எதிர் பார்த்ததையும் விட அதிகமான பேராளர்கள் கலந்து கொண்டு, எங்களது இயக்கத்தை பேரியக்கமாக அங்கீகரித்து, சிறப்பிக்க ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் காத்தான்குடி பேராளர் மாநாட்டுக்கு வருகை தந்த அனைத்து பேராளர்களுக்கும் முதற்கண் எங்களது பணிவான அன்பு கலந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பேராளர் மாநாட்டில் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட பல்வேறு கருத்துக்களில் "செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலியும், தவிசாளர் பஷீர் சேகுதாவூதும் பதவி பட்டங்களை மனதில் கொண்டுதான் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் இருந்து வெளியேறினார்கள் என்று சொல்லப்படுவது, பொய்யான ஒரு கட்டுக் கதையாகும்’ என்ற தொனியில் பேசிய உயர்பீட உறுப்பினர் பஸீர் நியாஸ்தீனின் கருத்தில் உண்மையிலேயே பல உண்மைகள் மறைந்துள்ளன என்று தான் கூற வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான முகத்தைக் காண்பித்துக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர், எமது மக்களின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனாவுக்கே என்ற செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலியின் கருத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், தபால் வாக்குகள் அளிக்கப்பட்டு சில நாட்களின் பின்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு என்ற சைகையினை முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் காட்டினார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியினைத் தொடர்ந்து, நல்லாட்சி அரசின் பார்வையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவரை விட, செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலியே முழு ஆதரவினை மக்களிடத்தில் பெற்றுத் தந்தவர் என்ற நல்லபிப்பிராயமானது, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவரை தவிர்த்து, அன்று செயலாளர் நாயகமாக இருந்த எம்.டி.ஹஸனலியினை கேபினெட் அமைச்சராக தீர்மானிக்கும் நிலைப்பாட்டுக்கு கொண்டு சென்றது. ஆனால் கட்சியினை பாதுகாக்க வேண்டும் என்ற செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலி மற்றும் சிலரது கொள்கையானது கேபினெட் அமைச்சினை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவருக்கு வழங்கும் நிலைப்பாட்டுக்கு வழிவகுத்தது எனலாம்.

செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலிக்கு இராஜாங்க அமைச்சு வழங்கும் சந்தர்ப்பத்தில், அடுத்த பாராளுமன்ற தேர்தலின் பின் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் உட்பட மற்றும் செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலிக்கும் சேர்த்து இரு கேபினெட் அமைச்சுக்களை வழங்குவதாக ஆதாரப்பூர்வமான பல தகவல்கள் கசிந்து வெளியாகின.

பாராளுமன்றத் தேர்தலும் வந்தது, செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் பார்வையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அவருக்கு கேபினெட் அமைச்சு கிடைக்கும் பட்சத்தில், அது தனது தலைமைத்துவத்துக்கு அச்சுறுத்தலாகி விடும் என்பதை மனதில் கொண்டு, செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலி தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்து, தேசிய பட்டியல் தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் பல வாக்குறுதிகளை வழங்கி, நம்பவைத்து அவரது பெயரை தேசியப்பட்டியலில் போட்டார். 

அதே போல் தவிசாளர் பஷீர் சேகுதாவூதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் என்பதால், மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் பார்வையில், ஏற்கனவே கேபினெட் அமைச்சராக இருந்த தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தேர்தலில் வென்று கேபினெட் அமைச்சினைப் பெற்றால், அதுவும் தனது தலைமைத்துவத்துக்கு சவாலாகிவிடுமென, தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்து தேசியப்பட்டியலில் தருவதாக வாக்களித்து, நம்பவைத்து அவரது பெயரையும் தேசியப்பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் போட்டார். 

தேர்தல் முடிந்த கையோடு செயலாளர் நாயகம் எம்.டி.ஹஸனலியும், தவிசாளர் பஷீர் சேகுதாவூதும் தேசியப்பட்டியல் கேட்கிறார்கள் என, நடந்தவைகளை மறைத்து, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு முரணாக, பல கட்டுக் கதைகள் புதிய வடிவில் வெளியாகி, மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு, அவர்களது நற்பெயரையும் களங்கப்படுத்தியது.

உண்மையில் போட்டியிட தயாராக இருந்த இவ்விருவரையும் தேர்தலில் களமிறங்க விட்டிருந்தால், இவர்கள் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒரு காரணமாவது பொருந்தி இருந்திருக்கும். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர், அவரையும் தாண்டி இன்னொருவருக்கோ அல்லது கிழக்கு மாகாணத்துக்கோ கேபினெட் அமைச்சினை வழங்க ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியாக விருப்பம் இன்மையை பிரதிபலித்து வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இதுவே பல முஸ்லீம் காட்சிகள் தோன்ற காரணமாகவும் அமைந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் இவ்வாறான அணுகு முறையினை புரிந்து கொண்ட இவர்கள் இருவரும், தங்களை சுற்றி சதிகள் நடப்பதை உணர்ந்து, இன்னும் இருந்தால் இதைவிடவும் மோசமான பலிகள் எம்மீது சுமத்தப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையால், ஒதுங்கிச் சென்றார்களே தவிர, பதவி பட்டங்களுக்காக அல்ல என்பதே உண்மையாகும். எனவே இதன்படி இவர்கள் இருவரும் தேசியப்பட்டியல் கேட்டிருக்கவில்லை என்பதும், இது திட்டமிட்ட சதியாக, சொல்லப்பட்ட கட்டுக் கதை என்பதும் இங்கு தெளிவாகிறது.

ஐ.எம்.ஹாரிப் 
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு.

Share The News

Post A Comment: