சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை மலர்வதற்கு ஹாரிஸ் , ரவூப் ஹக்கீம் தடை!



- இறுதி புரட்சியை ஆரம்பித்து ஹனிபா உரை

காரைதீவு நிருபர், திருமேந்திரா 

சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு உள்ளூராட்சி சபை கிடைக்க விடாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இக்கட்சியின் பிரதி தலைவர் இராஜாங்க அமைச்சர் எச். எம். எம். ஹாரிஸ் ஆகியோரே தடை ஏற்படுத்தி வைத்துள்ளனர் என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை. எம். ஹனிபா தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ளூராட்சி சபையை வென்றெடுப்பதற்கான இறுதி புரட்சியை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சம்பிரதாயபூர்வமாக ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இதில் இவர் தலைமையிலான மக்கள் பணிமனை முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது பிரதேச மக்களின் தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையை வலியுறுத்தி கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி ஈட்டிய சுயேச்சை குழு உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

இங்கு பேசியபோது வை. எம். ஹனிபா மேலும் தெரிவித்தவை வருமாறு:-

2015 களில் இருந்து சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை வேண்டும் என்கிற கோரிக்கையை சாய்ந்தமருது பிரதேச மக்கள் வலியுறுத்தி வருகின்றோம். கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற சம்பவங்களே தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கைக்கு சாய்ந்தமருது பிரதேச மக்களை இட்டு சென்றன. கல்முனை மாநகர சபையில் அங்கம் வகித்த சாய்ந்தமருது உறுப்பினர்கள் தாக்கப்பட்டார்கள். சாய்ந்தமருது மக்களுக்கு முற்றிலும் தெரியாத வகையில் சாய்ந்தமருது பிரதேசத்தின் எல்லைகள் பறிக்கப்பட்டன.

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை வேண்டும் என்கிற கோரிக்கை எமது மக்கள் சார்பாக முன்வைக்கப்பட்டபோது முஸ்லிம் எம். பிகள் இக்கோரிக்கையை அடிப்படையில் ஏற்று கொண்டார்கள். இதை நிச்சயம் பெற்று தருவார்கள் என்று வாக்குறுதி வழங்கினார்கள். ஆனால் இன்னமும் எமக்கான உள்ளூராட்சி சபை இவர்களால் பெற்று தரப்படவே இல்லை. ஏனென்றால் சாய்ந்தமருது பிரிந்து செல்கின்ற பட்சத்தில் தமிழர்களிடம் கல்முனை மாநகர சபை பறி போய் விடும் என்று முஸ்லிம் எம்.பிகளுக்கு பூச்சாண்டி காட்டப்பட்டு உள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபையை பெற்று தர வேண்டும் என்கிற கோரிக்கையுடன் நான் இது வரையில் 42 தடவைகள் ரவூப் ஹக்கீமின் கொழும்பு இல்லத்துக்கு சென்று இருக்கின்றேன். கரு ஜயசூரிய உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக இருந்தபோது எமது கோரிக்கையை ரவூப் ஹக்கீம், ஹாரிஸ் ஆகியோர் மூலமாக அவருக்கு முன்வைத்தோம். சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை கொண்டு வர அவர் சம்மதித்தார். ஆனால் மு. கா தரப்பில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இடைக்கால தேர்தல் வந்தபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரசாரத்துக்காக கல்முனைக்கு வந்த இடத்தில் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபையை பெற்று தருவார் என்று ரவூப் ஹக்கீமின் தேர்தல் கால பரிந்துரையின் பேரில் வாக்குறுதி வழங்கினார். சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை தரப்படும் என்கிற பிரகடனத்தை அரசாங்க தரப்பில் உத்தியோகபூர்வமாக மேற்கொண்டவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையே நாம் பார்க்கின்றோம்.

கடந்த உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அப்போதைய உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவை சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்தபோது சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபையை பெற்று தருவார்கள் என்று இருவரும் சேர்ந்து வாக்குறுதி வழங்கினார்கள்.

இதே நேரம் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா பேசி சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை கிடைக்க வழி வகை கொண்டு வந்தார்.

ஆனால் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை இன்னமும் கிடைக்கவே இல்லை. அதாவுல்லாவின் முயற்சியில் ஜனாதிபதியுடன் ஆசியுடன் அமைச்சரவை தீர்மானம் மூலமாக கிடைக்க இருந்த உள்ளூராட்சி சபையை கிடைக்க விடாமலும் தடை ஏற்படுத்தியவர் ரவூப் ஹக்கீமே ஆவார். இவரும், கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான ஹாரிஸுமே எமக்கான உள்ளூராட்சி சபையை கிடைக்க விடாமல் தடை போட்டு வைத்திருக்கின்றனர். 

ஏன் இவர்கள் இவ்விதம் தடை போட்டு வைத்திருக்கின்றனர் என்பது எமக்கு இன்னமும் புரியவில்லை. சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை கிடைத்தால் கல்முனை மாநகர சபை தமிழர்களிடம் பறி போய் விடும் என்கிற பூச்சாண்டியை நாம் பொய்ப்பித்து காட்டி இருக்கின்றோம். அதாவது கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் எமது சுயேச்சை குழு உறுப்பினர்கள் போட்டியிட்டு 09 ஆசனங்களை வென்று கல்முனை மாநகர சபையில் சமப்படுத்துகின்ற சக்தியாக விளங்குகின்றோம். அதே போல சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்கப்படாமல் இருப்பதற்கு பிரதேசவாதம் காரணமாக இருக்கின்றதோ? என்றும் கேள்வி எழுகின்றது. கல்முனை மண்ணுக்கும் சாய்ந்தமருது பிரதேசத்துக்கும் இடையில் பல தசாப்த காலங்களாக மிக நெருக்கமான உறவு நிலை எல்லா வகைகளிலும் இருந்து வருகின்றது. சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி கிடைக்க வேண்டும் என்றே கல்முனை மக்களில் அநேகர் உண்மையில் விரும்புகின்றனர்.

ரவூப் ஹக்கீமை கேட்கின்றபோதெல்லாம் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவதற்கு ஹாரிஸே முட்டைக்கட்டையாக உள்ளார் என்று எமக்கு கூறுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். ஆனால் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக குலாவுவதை நாம் காண முடிகின்றது. கல்முனையை சொந்த இடமாக கொண்டபோதிலும் சாய்ந்தமருதை புகுந்த மண்ணாக கொண்ட ஹாரிஸ் உண்மையில் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபையை பெற்று தர முன்னின்று உழைக்க வேண்டியவராக உள்ளார். ஆனால் அவரின் எதிர்மறையான நடவடிக்கை விந்தையாக உள்ளது.

இவர்கள் இருவருக்கும் நாம் வழங்குகின்ற இறுதி எச்சரிக்கை இது ஆகும். அதாவது சாய்ந்தமருது பிரதேச மக்களிடம் 20,000 வாக்குகள் உள்ளன. காலம் காலமாக முஸ்லிம் காங்கிரஸுக்கே சாய்ந்தமருது மக்கள் வாக்களித்து வந்துள்ளனர். இதனால்தான் கல்முனை தொகுதி மு. காவின் கோட்டையாக இருந்து வந்திருக்கின்றது. மட்டும் அல்லாமல் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக ஹாரிஸ் தெரிவாகி வந்துள்ளார். சாய்ந்தமருது பிரதேச மக்களின் கணிசமான வாக்குகள் மூலமாகவே ஹாரிஸ் பாராளுமன்ற உறுப்பினராக வர முடிந்துள்ளது. மாகாண சபை தேர்தலோ, பாராளுமன்ற தேர்தலோ விரைவில் வரும் என்பது யாவரும் அறிந்ததே. எமக்கான உள்ளூராட்சி சபையை இருவரும் அதற்கு முன்னதாக பெற்று தர தவறுகின்ற பட்சத்தில் நாம் மு. காவை தவிர்த்து வேறு கட்சியையே தேர்தலில் ஆதரிக்க நேரும். இதனால் கல்முனை தொகுதியில் மு. கா தோல்வி அடைய நேரும். மு. காவின் கோட்டையாக கல்முனை தொகுதியை தொடர்ந்து வைத்திருப்பதா? அல்லது அந்த கோட்டை தகர்க்கப்படுவதற்கு இடமளிப்பதா? என்பதை ரவூப் ஹக்கீம் தீர்மானிக்க வேண்டும். அதே போல பாராளுமன்ற தேர்தலில் கல்முனை தொகுதியில் தொடர்ந்தும் வெற்றி முகமாக உலா வருவதா? அல்லது வெற்று முகமாக மாறுவதா? என்பதை ஹாரிஸ் தீர்மானிக்க வேண்டும். எமக்கான உள்ளூராட்சி சபையை பெற்று தருகின்ற பட்சத்தில் மு. காவை நாம் ஆதரிப்போம். அவர்களால் பெற்று தரப்படாத உள்ளூராட்சி சபையை வேறு வகையில் வெற்றி கொள்வதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...