அல்-கிம்மா நிறுவனத்தினால் மன்னார் மாவட்டத்தில் குடிநீர்க் கிணறுகள்




எம்.ஐ. அஸ்பாக்

கடந்த ஆறு வருடகாலமாக கல்குடா மண்ணில் இயங்கி வரும் அல்-கிம்மா நிறுவனமானது வறிய மக்களின் தேவை கருதி வாழ்வாதார உதவிகள் மற்றும் குடிநீர் குழாய் இணைப்புத்திட்டம் என்று பல சேவைகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அதன் தொடரில், வடபுலத்தில் யுத்த காலத்தில் தங்களின் இருப்பிடங்கள், உறவுகள், மற்றும் சொத்துக்களை இழந்து மீள் குடியேற்றம் பெற்று மன்னார் பிரதேச எரிக்கலம்பிட்டி மற்றும் தலைமன்னார், தாராபுரம் ஆகிய ஊர்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கான சுத்தமான குடி நீரைப் பெற்றுக்ககொள்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். 

குடிநீர்க் கிணறுகள் அமைக்க போதிய வசதியின்மையால் குறிப்பிட்ட பிரதேச மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குவதாக மன்னார் மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் சமூக நலன்விரும்பிகள் ஒன்றிணைந்து அல்கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறுன் (ஸஹ்வி) அவர்களிடம் கூறிய போது குறிப்பிட்ட மக்களின் குடிநீர்ப்பிரச்சினையை தீர்த்துவைக்கும் முகமாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

அதன் பயனாக, தேவையுடைய மக்களை இணங்கண்டு அவர்களின் குடிநீர் தேவையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் குறிப்பிட்ட பிரதேசத்திற்கு நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் எச்.எம். ஜாபிர் உள்ளிட்ட குழுவினர் 26.02.2017 நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தனர். 

அதன்போது நேரடியாக அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையாகவுள்ள குடிநீர்க்கிணறுகளை அமைப்பதற்கான ஒப்புதலை வழங்கினர். இதன்போது, நிறுவனத்தின் கணக்காளர் ஏ.எல். இஸ்ஸதீன், குடிநீர்த்திட்ட இணைப்பாளர் எம்.எச்.எம். றிஸ்வி சிறாஜி மற்றும் நிறுவனத்தின் ஊடகவியலாளர் எம்.ஐ. அஸ்பாக் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இதில் சுமார் 120க்கும் அதிகமான குடும்பங்;களுக்கு குடிநீர் வசதியினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஏலவே சுமார் 60க்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிறுவனத்தினால் கிணறுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்த்கது. இதன் போது ஏலவே அமைக்கப்பட்ட கிணறுகளும் பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினரால் பார்வையிடப்பட்டன.